/indian-express-tamil/media/media_files/2025/05/13/PJSQwwEaYusFbtPNzYKf.jpg)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது நடிப்பில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவா' படத்திற்காக தான் மேற்கொண்ட உடல் மாற்றங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசினார். இப்படத்தில் நடிகர் பாபி தியோலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ள சூர்யா, தனது கட்டுமஸ்தான சிக்ஸ் பேக்ஸ் முற்றிலும் இயற்கையான முறையிலேயே பெற்றதாகக் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Tamil actor Suriya Sivakumar talks about achieving six-packs with a 100-day plan for Kanguva: ‘At 49, it is like climbing a mountain’
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சூர்யா கூறியதாவது: "எனக்கு 30 வயதாக இருந்தபோது, உடற்பயிற்சி என்பது ஒரு தட்டையான சாலையில் நடப்பது போல இருந்தது. ஆனால் இப்போது எனக்கு 49 வயதாகிறது. இந்த வயதில், அது ஒரு மலையேற்றம் போன்றது. இப்போது வளர்சிதை மாற்றம் (Metabolism) குறைந்துவிடும் என்பதால், அதிக கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும், குறைவான கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். படப்பிடிப்பின்போது, நான் 100 நாள் இந்த டயட் திட்டத்தை பின்பற்றினேன். அந்த 100 நாட்களில், இயற்கையான முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டை அடைந்தேன்." என்று தெரிவித்தார்.
மேலும், தான் ஒரு உணவுப் பிரியராக இருந்தபோதிலும், தனக்கு எளிதில் உடல் எடை கூடுவதில்லை என்றும் கூறிய சூர்யா, "எனக்கு விரைவில் எடை கூடாத அப்படி ஒரு உடல்வாகு. நான் அதிகம் எடை போடுவதில்லை. அது மரபணுக்கள் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய சாப்பிட பிடிக்கும், நான் ஒரு உணவுப் பிரியன். என் மனைவிக்கும் மகளுக்கும் உணவு ரொம்ப பிடிக்கும், ஆனால் என் மகனுக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால் அந்த 100 நாட்களில், நான் முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் இருக்க முயற்சி செய்தேன். 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிக்ஸ் பேக்ஸ் கொண்டு வருவது ஒரு சவாலாகவும் இருந்தது," என்று கூறியுள்ளார்
49 வயதில் உடல் எடையை குறைப்பது பற்றி நிபுணர்கள்:
49 வயதில் 100 நாள் உணவுத் திட்டத்தை மேற்கொள்வது - முக்கியமாக விரைவான தீர்வை விட நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்துவது - குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும் என்று ஃபிசிகோ டயட் மற்றும் அழகியல் கிளினிக்கின் நிறுவனர், ஊட்டச்சத்து நிபுணர் வித்யா சாவ்லா கூறினார். இந்த வயதில், வளர்சிதை மாற்றம் குறைந்து வருவதால், உடல் எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். "எனவே, நீண்ட காலத்திற்கு பராமரிக்கக்கூடிய ஒரு சமச்சீர் உணவு முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்றுக்கொள்வது முக்கியம்," என்று சாவ்லா கூறினார்.
நடிகர் சூர்யாவின் 49 வயதில் ஏற்பட்ட இந்த 100 நாள் வியக்கத்தக்க மாற்றம், அதிக புரதம், முழு மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகள், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு, பால் பொருட்கள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைத் தவிர்த்தல் மற்றும் கடுமையான சீட்-மீல் கொள்கை (cheat meal policy) இல்லாமல் இருந்ததாலேயே சாத்தியமானது தான். இவை அனைத்தும் தீவிரமான தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் சரியான ஊட்டச்சத்துப் பொருட்களுடன் இணைக்கப்பட்டிருந்தன என்று ஆலோசகர் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளர் கனிக்கா மல்ஹோத்ரா கூறினார்.
அவரது திட்டம் பெரும்பாலும் மெலிந்த புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், போதுமான நீர்ச்சத்து மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட உணவு நேரங்களை உள்ளடக்கியதாக இருந்திருக்கும். மேலும், அவரது உடல் இலக்குகள் மற்றும் வயது தொடர்பான வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்ப அது வடிவமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், இத்தகைய கட்டுப்பாடு நிறைந்த உணவு முறை அனைவருக்கும் ஏற்றது அல்ல; தனிப்பட்ட தேவைகள், உடல்நல நிலை மற்றும் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், எந்தவொரு தீவிரமான உணவு அல்லது உடற்பயிற்சி மாற்றங்களையும் நிபுணர்களின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும். ஒரு மருத்துவ ஊட்டச்சத்து நிபுணராக, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால வெற்றிக்கு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள மல்ஹோத்ரா யதார்த்தமான எதிர்பார்ப்புகளுடன் இதை அணுகுவதும், படிப்படியான மற்றும் நிலையான மாற்றங்களில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு புதிய உணவுத் திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு, குறிப்பாக முதிர்ந்த வயதில், அடிப்படை சுகாதார நிலைமைகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்று அறிவுறுத்தியுள்ள சாவ்லா உங்கள் உடலின் சமிக்ஞைகளுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவைக்கேற்ப திட்டத்தை சரிசெய்யவும். உகந்த முடிவுகளுக்கு போதுமான நீர்ச்சத்து மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளை உணவு மாற்றங்களுடன் இணைப்பது அவசியம். இது நீண்ட கால நல்வாழ்வை நோக்கிய ஒரு பயணம், ஒரு குறுகிய தூர ஓட்டம் அல்ல," என்றும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.