Tamil Serial News: நிகழ்ச்சித் தொகுப்பாளினி, நடனம், பாட்டு எனத் தான் தேர்ந்தெடுத்த எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குபவர் பாவனா பாலகிருஷ்ணன். முதல்முதலாக கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கித் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். வெட்டியாய் லாக் டவுன் நாள்களைக் கழிக்காமல், வீட்டிலிருந்தபடியே தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களை இணைத்து, புதுமையான பல மேஷ்-அப் பாடல்களைத் தொகுத்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் பாவனாவின் குடும்பம் பற்றிய தொகுப்பு இதோ...
தன்னுள் இருந்த திறமைகளை மெருகேற்றிய பாவனாவின் தாய்தான் சிறுவயதில் அவருடைய முதல் எதிரி. ஆம், தன் மற்ற நண்பர்களெல்லாம் பள்ளி முடிந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது, பாவனா மட்டும் பாட்டு, நடனம், டென்னிஸ், பெயின்டிங் என ஏதாவதொரு வகுப்பில் இருப்பாராம். இவற்றுக்கு முதன்மை காரணம் அவருடைய தாய். இதுபோன்ற வெவ்வேறு வகுப்பிற்கெல்லாம் கட்டணம் செலுத்தப் பணமில்லாதக் காலத்திலும், பாவனா எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் அவருடைய தாய் குறிக்கோளோடு இருந்திருக்கிறார். அதேபோல முதல்முதலில் பாவனா கேமராமுன் தோன்றியதும் தன்னுடைய அம்மாவிற்காகத்தான். தன் அம்மாவின் புடவை பொட்டிக் விளம்பரத்துக்காகத்தான் முதல் முதலில் கேமராமுன் முகத்தைக் காட்டியுள்ளார் பாவனா.
ஒருபக்கம் அம்மா இப்படியென்றால், சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் போல இவரை கைக்குள்ளேயே வைத்திருக்கும் அப்பா இன்னொரு பக்கம். தன் ஒரே செல்ல மகளை அடிக்கடி பார்த்துக்கொள்ளும்படியான ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பையனுக்குத்தான் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று கனவு கண்டவரின் ஆசைப்படியே, பக்கத்துத் தெருவில்தான் பாவனாவின் மாமியார் வீடும் இருந்திருக்கிறது. இன்றுவரை பாவனாவுக்கு சிறந்த முதன்மை நண்பர் அவருடைய தந்தைதான்.
திருமணம் பொறுத்தவரைப் பயங்கரமாக உருகி உருகிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் பாவனாவின் ஆசையாக இருந்தது. அது வெறும் கனவாகவே போனது. ஆனால், தான் தேடியிருந்தாலும் இவ்வளவு நல்ல மனிதர் தனக்குக் கிடைத்திருக்க மாட்டார் என்பதுதான் தற்போதைய பாவனாவின் மைண்ட் வாய்ஸ். திருமணமான புதிதில் 'டாம் அண்ட் ஜெர்ரி' போல வாழ்ந்து வந்தவர்கள், தற்போது 'கொஞ்சம் சண்டை நிறையக் காதல்' பாலிசியை பின்பற்றி வருகின்றனர்.
மொழிப் பிரச்சனைக் காரணமாக பாவனாவின் கணவர் அவருடைய நிகழ்ச்சிகளையெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், அவருக்கான முழு சுதந்திரத்தைக் கொடுத்து பாவனாவை ஒவ்வொரு நாளும் உற்சாகப்படுத்தும் ஒரே மனிதர் அவருடைய கணவர்தான்.
பிரபலங்கள் என்றாலே சர்ச்சைகள் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் பாவனாவை பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து உருவ கேலி செய்தனர் நெட்டிசன்கள். ஆனால், அவற்றையெல்லாம் புன்னகையோடு கடந்தார் பாவனா. "நமக்கு மிகவும் முக்கியமானவர்கள் நம்மைக் காயப்படுத்தினால்தானே நாம் அதற்காக வருத்தப்படுவோம். ஆனால், என்னைச் சுற்றியுள்ள சொந்தங்கள் யாரும் என்னை அப்படிக் காயப்படுத்தியதேயில்லை" எனக்கூறி பதிலடி கொடுத்தார் பாவனா.
இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களில் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் இவருடைய பல்வேறு விதமான இசை நிகழ்ச்சிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"