குக்கரில் சமைத்த சாதத்தை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. வேக வைத்து வடித்த சாதத்தை சாப்பிட்டால் தான் நிறைய பேருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும். குக்கரில் சாதம் வைப்பதை விட, சாதத்தை வடித்து சமைப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்கு காரணம் சாதம் வடிக்கும்போது கிடைக்கும் கஞ்சி. கஞ்சி நல்ல சத்து நிறைந்த பானம். சூடான சாதத்தில் கஞ்சி மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பருப்பு துவையலுடன் சாப்பிட ஆஹா என்ன ருசி. அதேநேரம் மீதமாகும் சாதத்தில் இந்த கஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து வைத்து அடுத்த நாள் பழைய சோறாக சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும். கிராமங்களில் இந்த பழைய சோறில் உள்ள கஞ்சித் தண்ணிதான் நிறைய பேருக்கு டீ, காலை உணவு எல்லாமே.
ஆனால் இந்த வடி சாதத்தை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இஷ்டம் போல் தண்ணீர் ஊற்றி சாதம் வடித்தால் கஞ்சி சரியாக கிடைக்காது. வடிசாதத்தை சுவையாகவும் சரியாகவும் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
வடி சாதம் சமையலுக்கு தண்ணீர் அளவு முக்கியம். ஒரு கப் அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் என்பதுதான் சரியான அளவு. ஒருவேளை அரிசி சற்று நீளமாக இருந்தால் தண்ணீர் கொஞ்சமாக கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். சிவப்பு அரிசி என்றால் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பில் அரிசி மற்றும் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும். அடுப்பில் தீயின் அளவு முக்கியம். சாதம் கொதிக்கும் வரை எவ்வளவு அதிகமாக வேண்டுமானலும் அடுப்பை எரிக்கலாம். ஆனால் கொதித்த பிறகு, மிதமான சூட்டிலே சமைக்க வேண்டும்.
சில நேரங்களில் சாதம் ஒரு பகுதியில் சரியாக வெந்திருக்காது. அதற்கு பாத்திரத்தை நாம் அடுப்பில் சரியாக வைத்திருக்க மாட்டோம். எனவே அடுப்பில் பாத்திரம் வைக்கும் போது, எல்லா பக்கமும் சரியான அளவில் தீ கிடைக்குமாறு வைக்கவேண்டும்.
சிலர் எப்படி பார்த்து பார்த்து சமைத்தாலும், குழைய வைத்து வடித்து விடுவர். அதற்கு காரணம், சாதம் கொதித்த பின்னும் அதிக தீயில் வேகவைப்பதே. மேலும் அடிக்கடி கிண்டிக் கொண்டிருக்கவும் கூடாது. எனவே சாதம் குழையாமல் வடிக்க, கொதித்தபின் மிதமான சூட்டில் கிண்டாமல் வேக வைக்க வேண்டும்.
அப்படியும், ஒருவேளை சாதம் குழைந்து விட்டால் உடனே ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளற வேண்டும். இதனால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும். சாதத்தை வடித்த பின்னரும் சாதத்தில் தண்ணீர் இருந்தால், அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள். ஆனால் அப்போது கரண்டியைக் கொண்டு கிளறக் கூடாது.
இப்போது, குக்கர் இல்லாமலே பூப்போல் உதிரியான சாதம் ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.