நமது பாரம்பரிய உணவு நம் கலாச்சாரத்திற்கு நம்மை நெருக்கமாக கொண்டு வருவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கியமான நன்மைகளையும் தருகிறது. தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது ரசம். இது புளி சாறு, மிளகு, தக்காளி, சீரகம் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எளிதாக தயார் செய்யும் ரசத்தை சாதத்துடன் சாப்பிடலாம் அல்லது உணவுக்கு பிறகு சுவைக்கலாம். ரசம் பாரம்பரிய உணவின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அதன் அனைத்து பொருட்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக மருத்துவ ரீதியாகக் கூறப்படுகின்றன.
சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு வைத்தியம்
ரசம் உங்கள் சுவாசக் குழாயை சுத்தம் செய்யவும், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு ரசம் வைத்து சாப்பிடுவது சிறந்த தீர்வை தரும். நோய்வாய்ப்பட்ட அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற ரசம் சாப்பிடலாம்.
மலச்சிக்கலை சரி செய்யும்
ரசத்தில் பயன்படுத்தப்படும் புளி மலச்சிக்கலை தீர்க்க உதவும். குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உடல் எடை குறைக்க விரும்புவோரும் கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம்.
சத்துக்கள் நிறைந்தது
ரசம் தியாமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நியாசின் மற்றும் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், செலினியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்தது. எனவே இது சுவையானது மட்டுமல்ல சமச்சீர் ஊட்டச்சத்துக்களுக்காக உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 2 மேசைக் கரண்டி
தக்காளி- 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஓர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு தக்காளி குழைய வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான் சூடான மிளகு ரசம் ரெடி! இறக்கியதும் அதன்மேல் கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடலாம். தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil