ஒரு சிலருடைய வீட்டில் தான் தயிர் என்பது எப்போதாவது சேர்த்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் தயிர் தினமும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் கட்டாயம் இடம் பெற்றுவிடும் ஒரு உணவு பொருளாகவே இருக்கும். தினமும் உணவு சாப்பிடும் பொழுது இறுதியாக தயிர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அடிக்கடி பால், தயிர் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் பிரச்சனைகள் விரைவாக ஏற்படுவதில்லை. இவற்றை தவிர்க்கும் நபர்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு எலும்பு தேய்மான பிரச்சனைகள் இளம் வயதிலேயே வந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக பாலை தயிராக மாற்றத் தேவையான உறை தயிர் இல்லாமலேயே நாம் தயிர் தயாரிக்க முடியும். அது எப்படி என்று சமையல் கலை வல்லுநர் நிஷா மதுலிகா கூறுகிறார்..
கெட்டித் தயிர் செய்யத் தேவையானவை
கொதிக்க வைத்த பால் - 1லிட்டர்
பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் -2
எலுமிச்சை -1
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக சூடாக்க வேண்டும். இப்போது 2 பச்சை அல்லது சிவப்பு மிளகாயை பாலில் தண்டுடன் இட வேண்டும். பிறகு அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும். பின்னர் பாத்திரத்தை 10 முதல் 12 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்டார்டர் ரெடியாகி இருக்கும்
இப்பொழுது தயிர் எப்படி செய்வது என்று காண்போம். ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக சூடாக்க வேண்டும். பிறகு 2 டீஸ்பூன் ஸ்டார்டரை எடுத்து அதில் இட வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்திற்கு பாலை மாற்ற வேண்டும். அதன் பின் 7 முதல் 8 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் . இப்போது திறந்து பார்த்தால் நீங்கள் விரும்பிய ஆரோக்கியமான தயிர் ரெடியாகி இருக்கும்.
தயிர் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை
•தயிர் செய்ய எப்போதும் முழு கிரீம் பாலை பயன்படுத்துங்கள்
•பாலை கொதிக்க வைத்த பின்பு சிறிது நேரம் மூடி வைக்கவும்
•தண்டுடன் கூடிய மிளகாயை எப்போதும் பயன்படுத்த வேண்டும். தண்டில் உள்ள சாறு தயிருக்கு உள்ளார்ந்த புளிப்பு சுவையை கொடுக்க உதவுகிறது.
•இந்தத் தயிரை உடனடியாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். நேரமாகி சாப்பிட நினைத்தால் புளிப்பாக மாறுவதைத் தடுக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.