Tamil Health Update : இந்திய பாரம்பரிய உணவுகளில் முக்கியமானது இட்லி. உடலுக்கு மிகவும் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் இட்லி அரிசி மற்றும் உளுந்து மாவை ஒன்றாக கலந்து செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவின் பல பகுதிகளில் காலை உணவாக உட்கொள்ளப்படும் இட்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. ஆனால் இந்த இட்லி சில சமயங்களில் நமக்கு பெரிய சவாலாக அமையும்.
எவ்வளவுதான் பார்த்து பார்த்து இட்லி செய்தாலும், அது கல்லு போன்றோ அல்லது அதிக புளிப்புடன் இருந்தாலே இட்லி மீதான ஆசையே போய்விடும் அளவுக்கு கோபம் வந்துவிடும். இந்த நிலையை தவிர்க்க பலரும் பலவிதமான யோசனைகளை சொல்லுவார்கள். இதில் ஒரு சில யோசனைகள் நமக்கு பயன்தரும் வகையில் அமைந்தால், பல யோசனைகள் நமக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
ஒரு கலையை முழுமையாக கற்றுக்கொண்டது போல இட்லி மாவு அரைத்து அதனை பதமாக கரைத்து வைப்பதும் ஒரு கலைதான். பலரும் இந்த கலையை முழுதாக அறியவில்லை என்றே கூறலாம். ஆனால் மாவு பதமான மாவு அரைத்து இட்லியை பஞ்சுபோல செய்வதற்கு முக்கியமான பல யோசனைகள் உள்ளது. அதில் ஒருசில யோசனைகளை இந்த பதிவில் பார்போமா?
முக்கால் கிலோ இட்லி அரிசி அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.இதற்கு கால்பங்கு (250கி) உளுந்து எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து சிறியதாக வாங்கினால் உபரி அதிகம் வரும்.
அதன்பிறகு மாவை அரைக்கும்போது ஊறவைத்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் போதுமானது. அரைக்கும்போது இடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும். உளுந்தம் மாவு எவ்வளவு நன்றாக அரைகிறதோ அநத அளவிற்கு இட்லி மீருதுவாக கிடைக்கும்.
ஆனால் அரிசியை மைய அரைக்காமல் சிறிது நரநரவென அரைத்தால் போதுமானது. முழுவதுமாக அரைத்துவிட்டால், இட்லி நன்றாக வராது. இதற்கு 15 நிமிடங்கள் அரிசியை அரைத்தால் போதுமானது. அரிசி அரைக்கும்பொது தண்ணீர் தாரளமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு ஊற்றி விடக்கூடாது
இட்லி நன்றாக வர அரிசி அரைக்கும்போதே கல் உப்பு சேர்த்து அரைப்பது முக்கியமானது. இந்த விஷயங்களை தவறாமல் செய்தால், மிருவான இட்லி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.
அரிசி மற்றும் உளுந்தம் மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிட்டு அதன்பிறகு இட்லி செய்ய வேண்டும். ஒருவேளை மாவை நீங்கள் பிரிட்ஜில் வைத்திருந்தால் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே அதனை வெளியில் எடுத்துவைத்துவிட வேண்டும். உங்களுக்கு தேவையான மாவை மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்துவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil