நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப் போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது.
காலையில் தூங்கி எழுந்ததும் வயிற்றில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் பலரும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். சிலர் வெந்நீர் குடிப்பார்கள்.
வயிற்றில் காலியாக இருக்கிற சமயங்களில் மெட்டபாலிசம் மிக வேகமாக நடக்கும். அதனால் தான் உடலை சுத்தப்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்கிறோம். சில பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்சின்களையும் அவை உடலிலிருந்து வெளியேற்றிவிடும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள காலையில் எழுந்ததும் எலுமிச்சையுடன் சேர்த்து என்னெல்லாம் குடிக்கலாம் என பார்ப்போம்.
எலுமிச்சை சாறு மற்றும் மிளகு
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். குறிப்பாக, இதைக் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும். இந்த பானத்தைக் குடித்து ஒரு மணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. குறிப்பாக காபி, டீ கையிலேயே தொடக் கூடாது. மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.
எலுமிச்சை சாறுடன் இஞ்சி
இரவில் தூங்கச் செல்லும் முன்பாக, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது இஞ்சியைத் துருவிப் போட்டு, இரவு முழுக்க ஊறவிட்டு விடுங்கள். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, அதற்குள் கிடக்கும் இஞ்சியைக் கீழே தூக்கிப் போடாமல் சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை சாறும் மஞ்சளும்
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மஞ்சள் தூள் உடம்பிலும் நம்முடைய ரத்தத்திலும் உள்ள தேவையில்லாத கழிவுகளையும் டாக்சினை வெளியேற்றி, உடலில் உள்ள அலர்ஜியை சரி செய்யும் தன்மை கொண்டது. இது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
எலுமிச்சையும் தேனும்
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து வெதுவெதுப்பான நீருடன் சாப்பிட்டு வர, எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறையச் செய்யும். மேலே சொல்லப்பட்ட பானங்கள் மூன்றிலும் தேன் சேர்க்கத் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் குடித்துப் பழகுபவர்களுக்கு குடிப்பது சிரமமாக இருந்தால் சிறிதளவு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இஞ்சிச் சாறு
இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.