Tamil Lifestyle Update For Sex Awareness : காமம்… ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஒரு வார்த்தை. மனித இனம் மட்டுமல்லாமல் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒரு உணர்ச்சி என்று சொல்லலாம். ஆனால் விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட மனித இனம் அல்லாத உயிர்கள் தங்களுக்கு விருப்பமான மற்ற பெண் உயிரினத்திடமோ அல்லது ஆண் உயிரினத்திடமோ காம உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இது பொதுவான ஒரு நிகழ்வு.
5 அறிவுள்ள விலங்கினத்திற்கு ஆண் பெண் பேதம் இல்லாமல் தங்களது காம உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் 6 அறிவுள்ள மனித இனத்தில் காமம் என்ற வார்த்தை முழுக்க முழுக்க ஆண்களை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒரு எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அப்போது பெண்கள் அப்படி செய்தால் அது தண்டனைக்குரிய நிகழ்வாக இருக்கும்.
தற்போது அந்த நிலை மாறி பெண்கள் மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற நிலை நடைமுறையில் இருந்தாலும் காமம் என்று வரும்பொது பெண்களுக்கு தேவையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெறும் அவலநிலையும் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படியே பெண்கள் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னாலும் அவர்களின் வார்த்தைக்கும், அவர்கள் விருப்பத்திற்கும் யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. காரணம் அவள் பெண் அவளுக்கு உலகம் தெரியாது என்று பல பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான். இதுதான் இப்படி என்றால், திருமணமான பெண்களின் நிலை இதைவிட கவலைக்கிடமாக உள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் இணையும்போது இருவருக்கும் உணர்ச்சிகள் சமமாகத்தான் உள்ளது. ஆனால் இந்த உணர்ச்சியை ஆண்கள் மட்டுமே அதிகமாக வெளிப்படுத்துகின்றனர்.
காரணம் திருமணமான பெண்கள் ஆணிற்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிதான். குறிப்பாக காமம் என்று வரும்போது பெண்கள் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு இந்த சமூகம் வேறு பெயர் வைத்து தான் அழைக்கும். தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தினாலும், இல்லர வாழ்க்கையை பொறுத்தவரை அவர்கள் ஆண்களின் ஆசைக்கும் இணங்கும் ஒரு பெண் என்ற பிம்பத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த காரணங்களுக்காக பெண்கள் தங்களது ஆசையை மனதிற்குள் வைத்துக் கொண்டு கணவரின் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். கணவன்மார்கள் இப்படி என்றால் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்கள் மகளிடம் காமம் பற்றி பேசவே மறுத்துவிடுகின்றனர். அதையும் மீறி அவர்கள் இது குறித்து கேட்டாலும், தங்களது மகள் என்று கூட பாராமல் தங்களது சந்தேக பார்வையை அவர்கள் மீது திணிக்கின்றனர். இதனால் பெண்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் மனஉலைச்சலில் சிக்கிக்கொள்கின்றனர்.
இது குறித்து எழுத்தாளர் லதா கூறுகையில்,
காலம் காலமாக பெண்கள் காமம் பற்றி பேசக்கூடாது. இல்லை காமம் என்பது ஒரு பெண்க்கு தேவைப்படாது. பெண் என்பவள் ஆண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவள் என்று ஒரு நம்பிக்கை. காமம் தனக்கு வேண்டும் என்று ஒரு பெண் பேசினால், இவருக்கு திருப்தி இல்லை என்றால் வேறு ஒருவரை தேடி போய்விடுவாரோ என்ற எண்ணம் தனது கணவனுக்கே தோன்றிவிடுமோ, அல்லது நம்மை பற்றி தவறான எண்ணம் வந்துவிடுமோ என்ற பயம் பெண்கள் மத்தியில் உள்ளது.
சமூகத்தின் அழுத்தம் மற்றும் பெற்றோர்களும் தங்கள் மகள்களிடம் காமம் பற்றி பேசுவதில்லை. பொதுவாக ஒரு பெண் காமம் பற்றிபேசினாலே அவளைப்பற்றி நல்ல எண்ணங்கள் யாருக்கும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக மனைவி இப்படி காமம் பற்றி பேசினால் கணவருக்கு அவர் மீது நல்ல எண்ணங்கள் தோன்றுவதில்லை. ஒரு பெண்ணுக்கு திருப்தி தேவை என்பதே சமூகத்தில் தற்போது பேசப்படுவதில்லை. பெற்றோர்களிடம் தங்களுக்கு காமம் கிடைக்கவில்லை என்று சொல்லும் தைரியம் என்ற பெண்ணுக்கும் கொடுக்கப்படுவதில்லை.
மாறாக பெண்களும் தங்களது மனதில் அந்த தைரியத்தை வளர்த்துக்கொள்வதும் இல்லை. ஒரு பெண்ணுக்கும் காமம் என்பது அவசியம் இல்லை என்பது தான் இன்றுவரை பேச்சாக உள்ளது. இதை பெண்களே நம்பும் அளவுக்கு சமூகம் அவர்களை மாற்றி வைத்துள்ளது. பெரும்பாலான பெண்கள் காமம் எங்களுக்கு முக்கியம் இல்லை. அன்பும் அரவனைப்பும் மட்டும்தான் முக்கியம் என்று பேசும் நிறைய பெண்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கே தெரியவில்லை.
வெளியுலகத்திற்காக வீட்டில் அழுத்தம் கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு கணவன் தனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை, துணி வாங்கி கொடுக்கவில்லை, அடித்து துன்புறுத்திறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஒரு கணவன் தனக்கு தாம்பத்தியம் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவரின் பெற்றோர்களே அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். அப்படியே அவர்களுக்கு நமது மகள் துன்பப்படுகிறாள் என்று தெரிந்தாலும் கூட திருமணம் முறிந்துவிட்டால் வெளியில் போய் என்னவென்று சொல்வது காமம் கிடைக்கவில்லை என்பதால் உன் மகள் வெளியில் வருவாள் அதற்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்களா என்று கேட்பார்கள்.
குழந்தை பிறப்பதற்காக மட்டுமே பெண்களுக்கு உறுப்புகள் இருக்கிறது என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதனால் பொதுவாக திருமணம் முடிந்து குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையை பார்த்துக்கொண்டு பிஸியாகிவிடுவால் அதன்பிறகு அவளுக்கு காமம் தேவைப்படாது என்ற நிலை திணிக்கப்படுகிறது. அவளுக்கு தேவை இல்லை என்னும்போது குழந்தை பிறப்பதற்காக தாம்பத்தியத்திம் அவசியம் என்பதால் அதில் ஈடுபடும் சூழ்நிலையில் உள்ளனர்.
குழந்தை பிறந்த உடன் அவளுக்கு காமம் தேவைப்படாது என்று முடிவு செய்துகொள்கின்றனர். அவளுக்கு தேவைப்பட்டாலும் அவர் சொல்வதற்கு தயாராக இல்லை. அவளுக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பது அவளுக்கும் தெரியவில்லை. இல்லை அது தேவைப்படக்கூடாது. அப்படியே தேவைப்படாலும் நம்மிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைத்துக்கொள்கின்றனர்.
ஆணுக்கு காமம் என்பது கட்டையில் பேற வரைக்கும் என்று சொல்வார்கள். பெண்களுக்கு குழந்தை பிறந்த உடனேயோ அல்லது மாதவிடாய் முடிந்த உடனேயே முடிந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லை உடலும் மனமும் ஆரோக்கியமான இருக்கும்போது இறுதிவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் காமம் என்பர் கட்டாயம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகிறது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு காமம் பற்றி பேசுவதற்கும், அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதும் அவசியமான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil