இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
இந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான தைப்பூச நாள் பிப்ரவரி 5 என்று கூறப்படுகிறது. அதேசமயம் பிப்ரவரி 4 என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தைப்பூசம் எந்த நாளில் கொண்டாடுவது, விரதமுறை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து பலருக்கு சந்தேகங்கள் உள்ளது இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியே பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
நம்மில் இருக்கும் பகைமை, நம்மை தேடி வரும் பகைமை இவை இரண்டும் ஒழிய தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.
விரதத்தை எப்படி மேற்கொள்வது?
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, மனதையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் பூஜை அறை மற்றும் வீடு முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொண்டு பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூ சாற்றி குறிப்பாக முருகன் படத்திற்கு பூ சாற்றி மனம் கமழும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வேல் அல்லது படம் வைத்து தனியாக வழிபாடு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பாக ஒரு சிகப்பு துணிவை விரித்து அதில் முருகன் படத்தை வைத்து அருகில் சிறதளவு பச்சரிசி வைத்து அதில் முருகனின் வேலை வைத்து வழிபடுங்கள். முருகப்பெருமான் சிலை வீட்டில் இருந்தால் அபிஷேகம் செய்துகொள்ளுங்கள். சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிருதம், உள்ளிட்ட பல பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யலாம். இதில் முருகனுக்கு மிகவும் பிடித்த ஜவ்வாது வைத்து அபிஷேகம் செய்யலாம்.
இப்படி அபிஷேகம் செய்த திருநீறை நீங்கள் உடம்பில் பூசிக்கொள்ளலாம். நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது நோய்பட்ட இடங்களில் திருநீற்றை பூசிக்கொள்ளலாம்.
தைப்பூச விரதம் எந்த நாளில் கடைபிடிக்க வேண்டும்?
4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்னமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்னமி உள்ளது. அன்றைய தினம்தான் திருச்செந்தூரில், தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. ஆனால் சிலர் திதியை வைத்து 4-ந் தேதி தைப்பூசம் என்று சொல்கிறார்கள். சிலர் நட்சத்திரத்தை வைத்து 5-ந் தேதி தைப்பூசம் என்று சொல்கிறார்கள். இதில் சிலர் நாங்கள் 4-ந் தேதியில் இருந்து 5-ந் தேதி வரை கொண்டாடப்போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.
விரதம் மேற்கொள்வது எந்த நேரம்?
இதில் ஒருசிலர் 4-ந் தேதி மாலை தொடங்கி 5-ந் தேதி மாலை வரை விரதத்தை கடைபிடிப்பார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டும் என்றால் இருக்கலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்கிறீர்களோ அதை சாப்பிட்டுக்கொள்ளலாம். விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“