தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனா். இனிவரும் நாள்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ஆம் தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்த வெயிலின் அதீத தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பைப் போன்று இதுவும் அதிக பேராபத்தை ஏற்படுத்தும்.
ஹீட் ஸ்டோர்க் என்பது என்ன?
ஹீட் ஸ்டோர்க் என்பதைத் தமிழில் வெப்பவாதம் என்கின்றனர்.
நம் உடலில் உள்ள வெப்பநிலையும், பிஎச் அளவும் எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்து சரியாக வேலை செய்யும்.
பொதுவாக நமது உடலின் இயல்பான வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட். உடலின் வெப்பநிலை 106 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதே ஹீட்ஸ்ட்ரோக்.
உடலில் வெப்பம் அதிகமாகும் போதெல்லாம் அதிகமான வேர்வையை வெளித்தள்ளி உடலில் இருக்கும் சூட்டை உடலே குறைத்துவிடும். ஆனால் வேர்வையை வெளித்தள்ளும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், உடலில் வெப்பம் அதிகமாகி ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்.
அறிகுறிகள்
உடல் சூடு அதிகரித்தல், வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், எரிச்சல் என அறிகுறிகளை ஏற்படுத்தும்
முன்னெச்சரிக்கை
வெயில் உக்கிரமாக இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே போனாலும் அவசியம் கையில் குடை வைத்துக் கொள்ள வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக்கொள்ளலாம். கூடுமானவரை பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கலாம்.
குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள், இணை நோய் உள்ளவா்கள் உப்பு - சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை பருகினால் உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விலங்குகளை வெயிலில் விடுவதைத் தவிர்க்கலாம்.
இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி ஹீட் ஸ்ட்ரோக் நம்மை நெருங்கவிடாமல் தடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“