Advertisment

பாரதி ஒரு தீர்க்கதரிசி; ஏன்? தமிழ் மொழியின் எதிர்காலம் குறித்து கூறியது என்ன?

மகாகவி பாரதியார் பிறந்த தினம்: தேசிய மொழிகள் தினத்தை கொண்டாடும் போது, தமிழ் மொழி குறித்து நாம் கருத்தில் கொள்ள வேண்டிய பாரதியின் தீர்க்கதரிசனம் இங்கே

author-image
WebDesk
New Update
Bharathiyar Docu Drama

மகாகவி சுப்பிரமணியப் பாரதி

கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்

Advertisment

டிசம்பர் 11 – மகாகவி சுப்பிரமணியப் பாரதி பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

            “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் 
             தேன் வந்து பாயுது காதினிலே” – என்னும் கவிதை வரியால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைச் சேர்த்த முறுக்கு மீசைக்காரன் சுப்பிரமணியப் பாரதிக்குப் பெருமை சேர்க்கும் நாள் இந்நாள்.

தேசியக்கவி சுப்பிரமணியப் பாரதியின் பிறந்த நாளை முன்னிறுத்தி மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு நவம்பர் - 19 முதல் ஒரு மாதகாலம் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசியில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தது. நிகழ்ச்சியை நடத்தி முடித்ததோடு மட்டும் நின்று விடாமல், அவ்வாண்டு முதல் பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை ‘தேசிய மொழிகள் தினமாகப்’ பிரகடனப்படுத்தியது.

Advertisment
Advertisement

இது மகாகவிக்குக் கிடைத்த மாபெரும் அந்தஸ்து என்பதோடு, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். மத்திய அரசால், “பாரதிய பாஷா திவாஸ்” என அறிவிக்கப்பட்ட இந்நாளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறித்தியது.

அவ்வகையில் கடந்தாண்டு முதல் தமிழகத்திலுள்ள, பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இந்நாளை, மாணவர்களுக்கிடையே சுப்ரமணியப் பாரதியின் பெயரில் பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாரதியின் மகத்துவத்தை இளம் தலைமுறையினருக்குள் புகுத்துவதில் தேசம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன.

            “காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
             காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்” என்னும் வரிகள் பாரதியின் தீர்க்கதரிசம். அவ்வரிகள் இன்று நிதர்சனமாயிருக்கின்றன என்பதற்கு அடையாளமாகவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வைக் கொள்ளலாம்.

பாரதத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளில்:-

            “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
             இனிதாவது எங்கும் காணோம்” என்னும் பாரதியின் கூற்று, வெறும் பொய்யும் புரட்டுமானதன்று. அவர் சுமார் 13 மொழிகளுக்கு மேல் ஆய்ந்தறிந்தவர். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த நிதர்சனமான உண்மையை உரக்க உரைத்துள்ளார். இது அவர் தமிழ் மொழி மீது கொண்டிருந்த தீராதக் காதலுக்கும் சாட்சியாகும்.

இன்னும் அவர் தமிழர்களுக்கு ஒரு கட்டளையை இட்டுச் சென்றுள்ளார். அது:-

           “ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
            வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
            சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
            தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்பதாகும். மகாகவியின் இக்கூற்று தமிழகத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும், அவர் கொண்டிருந்த கரிசனத்திற்குப் மிகப்பொருத்தமான சான்றாகும்.

ஆனால் தமிழகத்தில் பாரதியின் கூற்றுக்கு மாற்றாக, அன்னிய மொழியாம் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கம் அதிகரித்து, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிலிருந்து, வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் வரை தமிழ் மொழியில் படிப்பதையும், பேசுவதையும் கேவலமாகக் கருதும் நிலை நீடித்து வருகின்றது. இதனால் தெருக்களில் தமிழ் முழக்கம் இல்லாதது மட்டுமல்ல வீடுகளிலும் தமிழ் பேசும் பழக்கம் இல்லாமலாகியுள்ளது.

இதையும் அன்றே அவர், தீர்க்கதரிசனமாய் தெரிந்திருக்கிறார். அதனால்தான்:-

             “மெல்லத் தமிழ்ச் சாகும் – அந்த
              மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்” என ஒரு பேதை உரைத்ததாகக் குறிப்பிடுகிறார். அக்கூற்று மெய்த்து விட்டது போன்ற ஒரு நிலையைத் தான் இன்று தமிழகத்தில் பார்ப்பதற்கு முடிகிறது.

இவ் இழிநிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இத்தேசத்திலுள்ள எந்த மொழிக்கும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசால், தற்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், தொடக்க நிலையிலிருந்து, உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் இருக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள் ஒரு மொழி அறிவோடு மட்டுமின்றி, பன்மொழி கற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

             “செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
              சிந்தை ஒன்றுடையாள்”  என்ற பாரதியின் சிந்தை நம் தாய்மொழியைக் காப்பதிலும், தாய்நாட்டைப் பேணுவதிலும் எப்படி கரிசனமாக இருந்ததோ அதைப்போன்று, இன்று அவரின் பெயரால் தமிழ் மொழிக்குத் தேசம் முழுக்கக் கிடைத்திருக்கும் இவ்வளப்பரிய அங்கீகாரத்தை, இத்தேசத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல் பார்போற்றும் பாரதியாக மாற்றிக்காட்டும் பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை.

முனைவர் கமல. செல்வராஜ்

முனைவர் கமல. செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம், தமிழ் நாடு.

அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil bharathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment