வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறை: யாருக்கு யார் வாரிசு? என விளக்கம் | Indian Express Tamil

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறை: யாருக்கு யார் வாரிசு? என விளக்கம்

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் தமிழக அரசின் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறை: யாருக்கு யார் வாரிசு? என விளக்கம்
தமிழ்நாடு தலைமை செயலகம்

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை (எண்:478) வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், நீதிமன்றத்தை நாடி விண்ணப்பிக்கலாம்.

வாரிசுகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu rolls out fresh guidelines for issuing legal heir certificates