ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். இந்த புண்ணிய மாதத்தில் அம்மன் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆன்மிக மையங்களில் ஒன்றான திருச்சியிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் அற்புதமான வாய்ப்பை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சிறப்புச் சுற்றுலாப் பயணம் குறித்த முழு விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.
இந்தச் சுற்றுலாவில், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 8 முக்கிய அம்மன் கோயில்களைத் தரிசிக்கலாம். ஒவ்வொரு கோயிலும் அதன் தனிச்சிறப்புடனும், பக்தர்களின் நம்பிக்கையுடனும் பின்னிப் பிணைந்தவை. இந்த ஒரு நாள் பயணத்தில் தரிசிக்கவிருக்கும் கோயில்கள் என்னென்ன?
உறையூர் - வெக்காளியம்மன் கோயில்: கூரை இல்லாத கருவறையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வெக்காளியம்மன், உறையூரின் காவல் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
உறையூர் - கமலவல்லி நாச்சியார் கோயில்: நாச்சியார் திருநாமத்துடன் அருள் புரியும் இந்த அம்மன் கோயில், பக்தர்களுக்கு மன அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் அருள்கிறது.
திருவானைக்காவல் - அகிலாண்டேஸ்வரி கோயில்: ஜம்புகேஸ்வரர் கோயிலின் ஒருபகுதியாக விளங்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன், சிவனின் துணைவியாக இங்கு ஆட்சி செய்கிறாள்.
சமயபுரம் - மாரியம்மன் கோயில்: தமிழகத்தின் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் கோவில்களில் ஒன்றாகக் கருதப்படும் சமயபுரம் மாரியம்மன், வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.
சமயபுரம் - உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில்: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலும் பக்தர்களை ஈர்க்கிறது.
சிறுவாச்சூர் - மதுர காளியம்மன் கோயில்: காரைக்குடியில் இருந்து மாற்றப்பட்டதாகக் கூறப்படும் இந்த மதுர காளியம்மன் கோயில், அதன் தனித்துவமான கதைகளுக்காகப் பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
பொன்மலை - பொன்னேஸ்வரி அம்மன் கோயில்: திருச்சியின் பொன்மலையில் வீற்றிருக்கும் பொன்னேஸ்வரி அம்மன், பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அன்னையாக விளங்குகிறார்.
திருச்சி - உக்கிர காளியம்மன் கோயில்: திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த உக்கிர காளியம்மன் கோயில், பக்தர்களுக்கு அபயமளித்து அருள்கிறார்.
இந்த 8 சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்துவர, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை வெறும் ரூ. 1100 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்தச் சலுகை கட்டணத்தில் சுவையான மதிய உணவும் அடங்கும். இந்த ஆன்மிகப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க விரும்பினால், உடனடியாக உங்கள் இடங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
TTDC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள், 1800 4253 1111 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் முன்பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு: TAMILNADU TOURISM COMPLEX, NO.2, WALLAJAH ROAD, CHENNAI – 600002, TAMILNADU, INDIA. 044–25333344, 044–25333333
+91 75500 63312, 91769975928 ttdcslacounter@gmail.com