Happy Tamil New Year 2021: தமிழக மக்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சந்திரன் சூரிய சுழற்சியைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்து நாட்காட்டியின்படி சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டின் முதல் நாளாகும். தமிழ் புத்தாண்டு நாளில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழர்கள் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இது கேரளாவில் விஷு வருட பிறப்பு என்றும், அசாமில் உள்ளவர்களுக்கு பிஹு, பஞ்சாபில் பைஷாக்கி, மேற்கு வங்காளத்தில் போஹேலா போய்சாக் என்றும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் ஒரே நாளில் தங்கள் புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடுகின்றன.
தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளில் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வாசலில் பல வண்ணங்களில் அரிசி மாவு கோலமிட்டு அலங்கரிக்கிறார்கள். புத்தாடை அணிந்து, வீடுகளில் உணவு சமைத்து கடவுளுக்கு படைத்து வழிபடுகிறார்கள். பின்னர், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சாமியை வழிபடுகிறார்கள். பின்னர், மூத்தவர்களிடம் ஆசி பெறுகிறார்கள்.
தமிழ் புத்தாண்டு நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறுவது மரபாக இருந்து வருகிறது. தமிழ் புத்தாண்டில் மக்கள் பக்தி பாடல்களைப் பாடுகிறார்கள். பொங்கல் செய்து அதை சாமிக்கு படைத்து மற்றவர்களுக்கும் வழங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த பருவத்தில் மாங்காய் கிடைக்கும் என்பதால் சிலர் மாங்காய் பச்சடியும் செய்கிறார்கள்.
அதைவிட முக்கியமானது. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இந்த பருவத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் கிடைக்கும் பருவமாகவும் இருக்கிறது. அதனால், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை ஒரு தட்டிலும், நாணயங்கள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி, பூக்கள், ஆகியவை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இது வருகிற ஆண்டில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திலும் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எல்லா மொழி மக்களும் வெவ்வேறு பண்பாடு உடைய மக்களும் தங்களுக்கு என்று ஒரு ஆண்டு கணக்கையும் புத்தாண்டு கொண்டாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், தொன்மையான மொழியை பேசும் தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.
தமிழ் புத்தாண்டு நாளில் நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் சக ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது மரபு. தமிழ் புத்தாண்டு தினத்தில் உங்களுடைய வாழ்த்து உங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கலாம். அதனால், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.