சென்னை தியாகராய நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் திருக்கோவில் கும்பாவிஷேகம் விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்த கோவிலில் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்த பத்மாவதி தாயார் திருக்கோவில் அமைந்துள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை பழம்பெரும் நடிகை காஞ்சனா வழங்கியுள்ளார். தொடர்ந்து இந்த கோவில் தொடர்பான தகவல்களை சேகர் ரெட்டி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், கூறுகையில்,
இந்த கோவில் இடத்தை கடந்த 2010-ம் ஆண்டு தேவஸ்தானத்திற்கு கொடுத்தார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே 15 வருடங்கள் இந்த இடத்திற்காக பல சட்ட சிக்கல்களை சந்தித்த நடிகை காஞ்சனா தனது சகோதரியின் கணவரும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டே உதவியுடன் இந்த இடத்தை வாங்கினார். அதன்பிறகு இந்த இடத்தை பலர் ஆக்கிரமித்திருந்தனர்.
அவர்களை காலி செய்ய முயற்சி செய்து நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை தேவஸ்தானத்திற்காக ஒப்படைத்தனர். அதன்பிறகு 2021 வரை இந்த நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சில பிரச்னைகளால் தள்ளிப்போய்கொண்டிருந்தது.

நான் 2019-ம் ஆண்டு இந்த பதவிக்கு வரும்போது பத்மாவதி தாயார் கோவில் இங்கு வரவேண்டும் என்றுதான் இந்த இடத்தை கொடுத்தோம். ஆனால் இன்றுவரை வரவில்லை. எனக்கு 85 வயதாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் இங்கு கோவில் வரவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என்று கூறினார். அதன்பிறகு இங்கு கோவில் கட்ட வேண்டும் என்ற முயற்சியில் கிரிஜா பாண்டே அவர்களை அழைத்துக்கொண்டு இந்த இடத்திற்கு வந்தேன்.
அதன்பிறகு போர்டு மீட்டிங் வைத்து நிலைமையை எடுத்து சொல்லி கோவில் கட்ட ஏற்பாடு செய்தோம். அதன்படி 2021 பிப்ரவரி 13-ந் தேதி பூமி பூஜை போட்டோம். அப்போதே அவர்களுக்கு பாதி திருப்தி வந்துவிட்டது. அதன்பிறகு வேலை பரபரப்பாக முடித்து தற்போது கும்பாவிஷேகம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கோவில் 10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கும்பாவிஷேக விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
பத்மாவதி தாயார் கோவில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல்முறையாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் விரைவில் தரிசனத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தினமும் அன்னதானம் வழங்க யோசிகத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல் 500 பேருக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் பெயரில் தற்போது 7 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. வங்கி கணக்கில் பணம் உள்ளது. அதேபோல் தங்கம் வைரம் உள்ளது. இவை அனைத்தும் தேவஸ்தானம் பெயரில் உள்ளது. பக்தர்கள் விரும்பி செய்கிறார்கள். அதேபோல் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இலவச மருத்துவமனை, இலவச பேருந்து சேவை இலவச அன்னதானம் உள்ளிட்ட பல உள்ளன. இதை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil