உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் இயற்கை பொருட்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பொருட்கள் நமது உடலுக்கு பலவகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இதில் முக்கியமான ஒன்று கருவேப்பிலை. எந்த உணவு சமைத்தாலும் அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது என்று சொல்லிவிடலாம்.
அந்த அளவிற்கு உணவில் இன்றியமையான இடத்தை பெற்றுள்ள கருவேப்பிலை உடல் ஆரோக்கியத்திலும் இன்றியமையாத ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாக பயன்படுகிறது. என்னதான் கருவேப்பிலை இல்லால் உணவு முழுமை பெறாது என்று கூறினாலும் பலரும் உணவு உண்ணும்போது கருவேப்பிலை அகற்றி விடுகின்றனர். இதனால் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை.
ஆனால் இதனை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும்போது பல வகைளில் நன்மை தருகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் இரத்த சோகை, வயிற்றுப்போக்கு, மூல நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு நன்மை அளிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கருவேப்பிலைக்கு முக்கிய பங்கு உண்டு. செரிமான பிரச்சனைகள் முதல் சிறுநீரக பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், கருவேப்பிலை துவையல், என பல உணவுப்பொருட்களை தயாரிக்கலாம்
அந்த வகையில் கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்பதை பார்போம்
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு,
உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – அரை கப்,
பச்சை மிளகாய் – 4,
கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு,
தேங்காய் துருவல் – அரை கப்,
தக்காளி – 1, புளி – சிறு நெல்லி அளவு,
உப்பு – தேவையான அளவு,
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் கறிவேப்பிலையை உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் 4 பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள்.
இவை நன்கு வதங்கி வந்ததும் கழுவி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கறிவேப்பிலை நன்கு வதங்கியதும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் புளி கரைசல் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில், போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் சட்னியில் கொட்டி தாளிப்பு கொடுத்து இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.சுவையான கருவேப்பிலை சட்னி ரெடி.
கருவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வைட்டமின்கள் உள்ளது. இதனால் தினசரி உணவில் கருவேப்பிலை எடுத்துக்கொள்வது சிறந்தது. மேலும் கருவேப்பிலை இதுபோன்று சட்னி செய்து சாப்பிடும்போது கூடுதல் நன்மை கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil