Tamil Recipe News, Aatukal Paya Cooking Tamil Video: ஆட்டுக்கால் பாயா, அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. ஆப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ் இது. எனினும் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, புரோட்டா ஆகியவற்றுடனும் சாப்பிடத் தகுந்ததே! சாதத்துடனும் இதைச் சாப்பிடலாம்.
Advertisment
கடையில் பெரும்பாலும் ஆட்டுக்கால் பாயா சாப்பிடுகிறவர்களே நம்மில் அதிகம். வீட்டிலும் ஆட்டுக்கால் பாயாவை சுவையாகவும் சிம்பிளாகவும் செய்ய முடியும். எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Aatukal Paya Cooking Tamil Video: ஆட்டுக்கால் பாயா
Advertisment
Advertisements
ஆட்டுக்கால் பாயா செய்யத் தேவையானப் பொருட்கள்: வேக வைக்க தேவையானவை: ஆட்டுக்கால் - 4, வெங்காயம் - 3, தக்காளி - 2, பச்சை மிளக்காய் - 4, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி, மிளகு தூள் - 2 தேக்கரண்டி, தனியாத்தூள் - 2 மேசைகரண்டி, உப்பு - தேவையான அளவு, தேங்காய் - அரை மூடி
தாளிக்க தேவையானவை: எண்ணெய், பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி, கொத்தமல்லி - ஒரு கொத்து, புதினா - சிறிதளவு
ஆட்டுக்கால் பாயா செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.
ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடி ஆகியவற்றை அகற்றிவிடவும். மீண்டும் சுத்தமாகக் கழுவி எடுங்கள்.
குக்கரில் ஆட்டுக்கால், நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போடுங்கள். இவற்றைக் கிளறி விடுங்கள். பின்னர் 4 பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடுங்கள். மேலும் பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும். சூடு ஆறியதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.
இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளியுங்கள். பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, இஞ்சிபூண்டு பேஸ்டை சேர்க்கவும். இதை 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். பிறகு இதை கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும். வாசத்திற்கு கொத்தமல்லி தழை தூவுங்கள். இப்போது சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"