Tamil Recipe News, Curry Leaves Idli Podi Tamil Video: கறிவேப்பிலை, இரும்புச் சத்து அதிகமான ஒரு உணவுப் பொருள். சாப்பாட்டில் பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியவேண்டிய பொருள் அல்ல இது என்கிற விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. கறிவேப்பிலையை துவையலாக, ரசமாக, குழம்பாக செய்து சாப்பிடலாம். கூடவே இதில் இட்லி பொடி தயார் செய்து, மாதம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
இட்லி, தோசை, அடை என டிபன்களுக்கு மட்டுமல்லாது, சாதத்திற்கும் கறிவேப்பிலை பொடியை பயன்படுத்தலாம். அடிக்கடி சாம்பார், சட்னி என செய்யவேண்டிய வேலையை மிச்சப் படுத்துவதுடன், அவசரத்திற்கு கை கொடுக்கும் சைட் டிஷ் இது. சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
Curry Leaves Idli Podi Tamil Video: கறிவேப்பிலை இட்லி பொடி
கறிவேப்பிலை இட்லி பொடி செய்யத் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – அரை கப், கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன், மிளகு – அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 4 பற்கள், பெருங்காயத் தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப.
கறிவேப்பிலை இட்லி பொடி செய்முறை :
வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுக்கவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுங்கள்.
வறுத்த கறிவேப்பிலையை மிக்சியில் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி ரெடி. எளிதில் கெட்டுப் போகாத இந்த இட்லி பொடியை சில வாரங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.