Tamil Recipe News: காலையில் பெரும்பாலும் நம்மால் அதிக நேரத்தை சமையல் அறையில் செலவிட முடியாது. காரணம், அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். அல்லது, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்ப வேண்டியிருக்கும். எனவே சுலபமாக, விரைவாக செய்யக்கூடிய உணவு வகைகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
உணவை விட சைட் டிஷ், சுலபமாக செய்ய வேண்டியது இன்னும் முக்கியம். அப்படியொரு சைட் டிஷ், கொத்தமல்லி சட்னி. நம் வீட்டுத் தோட்டத்தில் முடிந்தால் இதை வளர்க்கலாம். இல்லாதபட்சத்தில் பக்கத்து பெட்டிக் கடைகளிலும்கூட கொத்தமல்லியை வைத்து விற்பார்கள். எளிதில் கிடைக்கும் கொத்தமல்லியை வைத்து உடனடி சட்னி எப்படி தயார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.
கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருள்கள்
கொத்தமல்லி – 1 கப்
நறுக்கிய தேங்காய் – 1/2 கப் (துருவிய தேங்காய் என்றால் 1/4 கப் போதும்)
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1 சிட்டிகை
மல்லி சட்னி செய்முறை
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் மற்றும் தோராயமாக நறுக்கிய தேங்காய் துண்டுகளுடன் கொத்தமல்லி இலைகளை (தோராயமாக நறுக்கவும்) மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.
இரண்டு டீஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து, இந்தக் கலவையைச் சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
அரைத்த சட்னியை சுத்தமான உலர்ந்த கிண்ணத்தில் மாற்றி அதனோடு உப்பு சேர்த்து, தாளிப்பதற்காகத் தயார் செய்யுங்கள்
சூடான வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், பெருங்காயம், உளுத்தம்பருப்பு மற்றும் முழு சிவப்பு மிளகாயை அதனோடு சேர்க்கவும்.
உளுத்தம்பருப்பு சிறிது பழுப்பு நிறமாக மாறிய பின் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து, ஏற்கெனவே தயாரித்து வாய்த்த சட்னியோடு சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!
ஐந்தே நிமிடத்தில் அசத்தலான டேஸ்டியான, உடல் நலனுக்கு உகந்த கொத்தமல்லி சட்னி தயார் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil