Tamil Recipe News, Pepper Kulambu Tamil Video: மிளகு, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒரு உணவுப் பொருள். அதிலும் இந்த மழை தருணத்தில் மிளகு வழங்கும் பயன்கள் ஏராளம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது மிளகு. இதற்கு எந்தக் காய்கறிகளும் வேண்டாம் என்பதால், செலவும் சிக்கனம்.
மிளகை பயன்படுத்தி செய்யப்பட்ட ரசம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். மிளகு குழம்பும் மிகச் சுவையானது மட்டுமல்ல; உடல் நலத்திற்கு தேவையானது. மிளகு குழம்பை எளிமையாகவும், சுவையாகவும் எப்படிச் செய்வது? என இங்கு பார்க்கலாம்.
Pepper Kulambu Tamil Video: மிளகு குழம்பு
மிளகு குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 50 கிராம், பூண்டு – 15 பற்கள், புளி – 1 எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு: மல்லி (தனியா)- 3 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு: நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீ ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன், கருவேப்பிலை – சிறிது
மிளகு குழம்பு செய்முறை :
முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து விடுங்கள். பிறகு சூடு தணிந்ததும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளற வேண்டும். தொடர்ந்து புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விடுங்கள்.
மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இதை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி.