Tamil Recipe News, Soft Idli Cooking Tamil Video: இட்லி மாவு அரைத்து பயன்படுத்துகிற பலருக்கு இருக்கிற ஒரே பிரச்னை, மாவு ஓரிரு நாட்களில் புளித்துவிடுவதுதான். எனவே 3-வது நாளில் இருந்து தோசைதான் சுட வேண்டியிருக்கிறது. அப்படி மாவை புளிக்க விடாமல், வாரம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இட்லி அவிக்க வழி இருக்கிறதா? என்றால், இருக்கிறது. இதற்கு மாவு அரைக்கும் முறை மிக முக்கியம்.
முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி சுத்தமாக வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைக்கும் சிலர் கழுவுவது இல்லை. முந்தைய முறை என்ன தான் கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். எனவே இம்முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.
அடுத்தபடியாக அரிசி மற்றும் உளுந்து 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது. உளுந்தை நீங்கள் அரைக்கும் பொழுது கைபடுவதை தவிர்த்து விடுங்கள். இடையிடையே தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி மூலமாகத் தள்ளி விட்டு அரைக்கலாம்.
உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் மட்டும் தான் நாம் கையால் மாவை எடுப்போம். மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் உபயோகிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.
பிறகு அரிசியை வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை.
இதன் பிறகு கிரைண்டரை தனியே எடுத்து மாவு சேமிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். முழுவதுமாக கைகள் படாமல் எடுக்க முடியாது. எனவே கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள். பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
மீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் சுத்தமாக எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த மாவை மறுநாள் காலையில் இட்லி சுட்டால் மெத்தன பஞ்சுபோல் இட்லி வரும்.
ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும்.
நாம் சுத்தமான முறையில் கை படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால் மாவு சீக்கிரமாக புளிக்காது. ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். எனவே இந்த முறையை பயன்படுத்திப் பாருங்கள்!
சரி, ஒருவேளை மாவு புளித்துவிட்டது. என்ன செய்யலாம்? புளித்த மாவில் சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் அந்த அளவிற்கு புளிப்பு தெரியாது. அதிகம் புளித்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிதளவு வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை போட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் புளிக்காத தோசை கிடைத்துவிடும். இதை முயற்சி செய்து பாருங்கள் மக்களே!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Tamil recipe news soft idli cooking tamil video dosa flour making tamil