Tamil Recipe News, White Rice In Cooker: குக்கர் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. உலையில் போட்டு சோறு வடிக்க நாம் ஆசைப்பட்டாலும்கூட, நேர நெருக்கடி பல வேளைகளில் அதை அனுமதிப்பதில்லை. குக்கரில் சில நிமிடங்களில் பக்குவமான சாதத்தை நாம் சமைத்துவிட முடிகிறது.
குக்கர் சமையலிலும்கூட சில எளிய நடைமுறைகளை பின்பற்றினால் சூப்பராக சோறு சமைக்க முடியும். உலையில் சாதம் சமைப்பதுபோல உதிரியான பக்குவத்தில் குக்கரில் சோறு சமைக்கும் செய்முறையை இங்கே காணலாம்.
White Rice Cooking Tamil Video: குக்கரில் சோறு சமைக்கும் முறை
உலையில் சாதம் சமைக்க, முதலில் அரிசியை ஊற வைப்போம். அதேபோல குக்கர் சமையலுக்கும் முதலில் அரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை அகற்றியதும் தண்ணீர் இல்லாமலேயே கைகளால் பிசைந்து கழுவுங்கள். பின் மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். அந்த தண்ணீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். இப்படி 3 முறை தண்ணீரில் அலச வேண்டும்.
அதன்பிறகு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் விடுங்கள். பின் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிட வேண்டும்.
உதிரியாக குக்கரில் சோறு
விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடுங்கள். விசில் 3 முறை சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.
பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறக்க வேண்டும். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். உலை வடி சாதம் போலவே குக்கரிலும் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம் இதுதான். இதுவரை இப்படி செய்யாவிட்டாலும், ஒருமுறை இந்த செய்முறையை பின்பற்றிப் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"