கூச்சமின்றி உறவுகளை அழைத்திடுவோம்

ஆங்கிலப் பள்ளிகளின் அதிகரிப்பும், மக்களிடையே உருவாகியுள்ள ஆங்கில மோகமும் தமிழகத்திலுள்ள குடும்ப உறவு முறைகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளன.

By: Updated: July 20, 2020, 08:23:33 AM

முனைவர் கமல.செல்வராஜ், எழுத்தாளர்

தமிழகக் கலாச்சாரப் பண்பாட்டின் ஆணிவேராக இருப்பது குடும்ப உறவு முறைகளாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறவு முறையில் அழைக்கப்படும் போதுதான், அவர்களின் அன்பும் பாசமும் மாறிமாறி வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் அரவணைப்பு அரணாக இருப்பார்கள்.

ஆனால், இன்று ஆங்கிலப் பள்ளிகளின் அதிகரிப்பும், மக்களிடையே உருவாகியுள்ள ஆங்கில மோகமும் தமிழகத்திலுள்ள குடும்ப உறவு முறைகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளன. உதாரணமாக மாமா – மாமி, பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி என அழைக்கும் அற்புதமான இரத்தப்பந்த உறவுகளெல்லாம், இன்று ஆங்கிலத்தில் அனைவரையும் ஒற்றை வார்த்தையில் அங்கிள் – ஆன்ட்டி என்று அழைக்கப்படும் நிலைக்கு மாற்றியுள்ளன.

அதைப்போன்றே தாத்தா – பாட்டி என அழகானத் தமிழில் அழைத்து வந்த உறவுமுறை இன்று ஆங்கிலத்தில் கிரான்ட்ஃபா – கிரான்ட்மா எனத் திரிந்துள்ளன. இதைவிடக் கொடுமை இதயங்களை இணைக்கும் அம்மா – அப்பா என்ற உறவு கூட, டாடி – மம்மி எனப் போலியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் குடும்ப உறவுமுறைகளில் பலவீனத்தை உருவாக்கி, உறவுகளுக்கிடையே தகாத உறவுகளுக்கு வழிவகுத்து வருகின்றன என்பது வேதனைக்குரியச் சீரழிவு.

எனவேதான், மீண்டும் பழைய உறவு முறைகளை இனிவரும் இளையத் தலைமுறைகள் அறிந்து கொண்டு, அவற்றையே பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குழந்தைப் பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.

அம்மா அப்பா உறவேதான்

அவர்கள் உதிரம் நாமேதான்

மூத்தோர் இருவர் உள்ளனரே

தாத்தா பாட்டி என்போமே!

O

தாத்தா பாட்டிப் பெற்றவர் ஐவராம்

இடையில் பிறந்தது அப்பாவாம்

மூத்தவர் இருவர் பெரியப்பா

இளையோர் இருவர் சித்தப்பா!

O

பெரியம்மா சித்தி என்போமே

அம்மா முன்பின் பிறந்த பெண்களையே

மாமா என்றே அழைத்திடுவோம்

அம்மாவோடுப் பிறந்த ஆண்களையே!

O

அத்தை மாமி என்போமே

மாமன் மனைவி அவர்தாமே!

மச்சான் மையினி என்போமே

அவர் வழிப் பிறந்தோரை!

O

கணவன் மனைவி இருவராம்

ஆசைப் பிள்ளைகள் நால்வராம்

மூத்தோர் அண்ணன் அக்காவாம்

இளையோர் தம்பித் தங்கையாம்!

O

உறவே நமக்குப் பலமாகும்

அதுவே நமக்கு அரணாகும்

கூச்ச மின்றி அழைத்திடுவோம்

அச்ச மின்றி வாழ்ந்திடுவோம்!

முனைவர் கமல. செல்வராஜ், எழுத்தாளர்
அருமனை.பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil rhymes for children to know relationship names dr kamala selvaraj

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X