Tamil Serial News: தமிழ் சினிமாவில் சில குழந்தைகளை எப்போதும் மறக்க முடியாது. அவர்கள் வளர்ந்து ஹீரோ/ஹீரோயினாக நடித்தாலும், இல்லை இன்னும் ஆண்டுகள் கடந்து அப்பா/அம்மா கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவர்களின் குழந்தை பருவ முகம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். அந்த வகையில் நடிகை ‘பேபி அஞ்சுவை’ குறிப்பிடலாம்.
பேபி அஞ்சு...
இயக்குநர் மகேந்திரனின் ’உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், பேபி அஞ்சு. அதன் பிறகு பூட்டாத பூட்டுகள், சின்ன முள் பெரிய முள், மீண்டும் கோகிலா, கர்ஜனை, ஹிட்லர் உமாநாத், டார்லிங் டார்லிங் டார்லிங், பொய் சாட்சி, வடிவங்கள், அழகிய கண்ணே, பூம் பூம் மாடு, வில்லியனூர் மாதா, என் செல்வமே, எங்கள் சாமி அயப்பன், அரங்கேற்ற வலை, அதிகாரி, அக்னி பறவை, அமிராமி, அகத்தியன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக, சில படங்களில் ஹீரோயினாக, பல படங்களில் குணச்சித்திர நடிகையாக என 100-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்தார்.
விவேக்குடன் காமெடி சீனில்
கன்னட நடிகர் டைகர் பிரபாகரைத் திருமணம் செய்த இவர், அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிறகு நடிகர் ஓ.ஏ.கே.சுந்தரைக் கரம் பிடித்தார். இப்போது இவருக்கு அர்ஜூன் என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் கடைசியாக `மதயானைக் கூட்டம்' படத்தில் நடித்த இவர், பிறகு சினிமாவிலிருந்து விலகியே இருந்தார். இதற்கிடையே அஞ்சு இறந்து விட்டதாக வதந்தி வெளியாகின.
இயக்குநரின் வசந்தின் கேளடி கண்மணி திரைப்படம் தான் அஞ்சு ஹீரோயினாக நடித்த முதல் படம். அந்தப் படத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மகளாக நடித்திருப்பார். அந்தப் படமும் அதில் இடம் பெற்ற பாடல்கள்களும், என்றும் பசுமையானவை. `கேளடி கண்மணி' படத்துல நடிக்கும்போது நான் ஆறாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். லயோலா காலேஜுக்கு எதிர்லதான் வீடு. சினிமாவுல என் கால்ஷீட்ஸ் எல்லாம் பாட்டியும், அம்மாவும்தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க” என அந்த நாட்களை ஒரு நேர்க்காணலில் நினைவு கூர்ந்தார் அஞ்சு.
கேளடி கண்மணி படத்தில்...
சினிமாவில் மட்டுமல்ல சீரியல்களிலும் நிறையவே நடித்திருக்கிறார் பேபி அஞ்சு. ராதிகாவின் சித்தி சீரியல் தான் அவருக்கு முதல் சீரியல். அதன் பிறகு கிருஷ்ணதாசி, சூலம், அகல் விளக்கு, செல்வி, அரசி ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்த அஞ்சு, அதன் பிறகு சினிமாவுக்கும், சீரியலுக்கும் சின்ன இடைவெளி விட்டிருந்தார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘மகராசி’ சீரியலில் சாமுண்டேஸ்வரியாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரம், ஹீரோயின், காமெடி வேடம், அம்மா என அனைத்தையுமே ஆர்பாட்டமில்லாத தனது அழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
மகனுக்காக நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த அஞ்சு, அவர் கல்லூரிக்கு சென்றதும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ’என் பையனுக்கு நான் மட்டும்தான் உலகம்’ என பெருமிதம் கொள்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”