Tamil Serial News: சீரியலில் பலர் அம்மாவாக நடிக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே ரசிகர்களிடம் அங்கீகாரம் பெறுகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களிடம் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ள செந்தில்குமாரியும் ஒருவர்.
கற்றது தமிழ் படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க படத்தின் மூலம் ரசிகர்களிடையே பரிச்சயமானார். மதுரையைச் சேர்ந்த செந்தில்குமாரி, கணவரின் வேலை காரணத்தால் சென்னையில் செட்டில் ஆகியிருக்கிறார். ஒரு மகன், ஒரு மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நடிகை செந்தில் குமாரி
நடிகை மீனாள் இவரின் தங்கை. அவர் மூலமாகவே நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார் செந்தில்குமாரி. அதற்கு கணவர் கொடுத்த ஊக்கமும் காரணம் என்கிறார். ”என் கணவரின் நண்பர் தான் இயக்குநர் ராம். அவர் என்னைப் பார்த்துட்டு என் கணவர் கிட்ட , ‘என்னோட படத்துல ஒரு சின்ன ரோல் உங்க மனைவியை சொல்லுங்களே’னு கேட்டுருக்கார். எனக்கு சின்ன வயசுலேருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. என் கணவர் கேட்டதும் உடனே ‘ஓகே’ சொல்லிட்டேன். இப்படிதான் என்னோட வெள்ளித்திரை என்ட்ரி அமைஞ்சது. அதுக்கப்புறம் என் தங்கச்சி மூலமாவும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது” என தனது திரை அறிமுகம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
கீச்சு குரலால் தனித்துவமாக தெரியும் செந்தில்குமாரி சின்னத்திரையிலும் நுழைந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் செல்லமான அம்மாவாகவும், கோபமான மாமியாராகவும் நடித்திருந்தார். தற்போது ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியின் அம்மாவாக லைட்டான வில்லத் தனங்களையும் செய்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் செந்தில்குமாரி
தீவிர விஜய் ரசிகையான இவர், கணவருடன் சண்டைப் போட்டுக் கொண்டு விஜய்யைப் பார்க்க சென்றாராம். இது குறித்து ஒரு பேட்டியில், “இளம் வயதிலிருந்தே நான் தீவிர விஜய் ரசிகை. நீண்ட நாட்களாகவே அவரைப் பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது. திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் தான் விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை நேரில் பார்க்க தயாராகி ஆசையோடு கிளம்பினேன். ஆனால், என் கணவர் என்னை போக கூடாது என்று தடுத்தார். பின் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அவர் என்னை கீழே தள்ளி விட்டு என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்து விட்டது. அதையும் மீறி நான் சண்டை போட்டுக் கொண்டு சென்று, விஜய்யை பார்த்துவிட்டு வந்தேன்” என்றார். தவிர மெர்சல் படத்தில், குழந்தையை இழந்த தயாக உணர்வுப்பூர்வமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
குடும்பப்பாங்கான முக அமைப்பு கொண்ட செந்தில் குமாரி
முன்பிருந்தே அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் செந்தில் குமாரிக்கு இப்போது தான் 40 வயதாகிறது. படபிடிப்பு இல்லாத நாட்களில் மகன், மகளோடு நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சீரியல்களில் பிஸியாகிவிட்டாலும், சினிமாவில் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பாராம் செந்தில்குமாரி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”