பெரிய திரை, சின்னத் திரை என இரண்டிலும் நின்று களமாடி வருபவர் சாந்தினி தமிழரசன். ஒரு பக்கம் ஜீ தமிழின் இரட்டை ரோஜா சீரியல், மறுபக்கம் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம், சுந்தர் சியுடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
சாந்தினி பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் சிறு வயதில் அதிக படங்களைப் பார்த்ததில்லையாம். வீட்டில் கண்டிப்புடன் வளர்த்துள்ளனர்.எத்திராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ள இவர் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தபோது ‘மிஸ் சென்னை’ அழகிப் போட்டியில் பங்கு பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஒரு தமிழ் சேனல் ரியாலிட்டி ஷோவில் தோன்றியிருக்கிறார்.அப்போதுதான் கே பாக்கியராஜ் பார்த்துவிட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.பிறகு ஆடிஷனில் செலக்ட் ஆனதால் சாந்தனு உடன் சித்து பிளஸ் 2 படத்தில் நடித்தார். தனது முதல் பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவதாக படித்துறை என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும் அவற்றை மறுத்து விட்டு தனது படிப்பைத் தொடர்ந்து முடிக்க கல்லூரிக்குச் சென்றுள்ளார். தனது பட்டப்படிப்பை 2014 ஆம் ஆண்டில் முடித்தார்.

அதன் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியவர் நான் ராஜாவாகப் போகிறேன் ,வில்லம்பு, லவ்வர்ஸ், கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி ,பலூன், மன்னார் வகையறா, என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.தெலுங்கில் ராஜா ரங்குஸ்கி படத்தில் வில்லயாக நடித்து அசத்தியுள்ளார்.பிறகு விஜய்சேதுபதியின் ‘கவண்’, ‘எட்டுத்திக்கும் பற’ உள்ளிட்ட படங்களின் மூலம் தொடர்ந்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். இதற்கிடையில் கடந்த 2018ஆம் ஆண்டு நந்தா என்ற நடன இயக்குனரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

பெரிய திரையில் பல படங்களில் நடித்தாலும் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைத்த அவர் சின்னத்திரை பக்கமும் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது தான் 2019ஆண்டு விஜய் டிவியிலிருந்து தாழம்பூ என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் நடித்தபின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைதொடர்ந்த தற்போது ஜீ தமிழின் இரட்டை ரோஜா தொடரில் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார் சாந்தினி. நல்ல டிஆர்பியில் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஷிவானிக்கு பதிலாக இவர் நடித்து வருகிறார்.பத்து ஆண்டுகள் திரை உலகில் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம் எனக்கூறும் அவர், தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களும் திரையுலகினரும் தன்னை நினைவில் வைத்துள்ளதாக கருதுகிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தால் சினிமா வாய்ப்புகள் பறிபோகும் என்பதை ஏற்க மறுக்கும் சாந்தினி இதன் மூலம் கிடைக்கும் புகழ் தான், நடிக்கும் படங்களுக்கான இலவச விளம்பரமாக அமைவதாக கருதுகிறார்.தற்போது இருதளங்களிலும் கலக்கி வருகிறார் சாந்தினி.

““தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“