சின்னத்திரையில் பல வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நடிகை ஸ்ருதி ராஜ். மக்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ள ஸ்ருதி முதலில் அறிமுகமானது வெள்ளித்திரையில் தான். இவர் 1995 ஆம் ஆண்டு வெளியான அக்ராஜன் என்ற மலையாள திரைபடத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு1996 ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். 1998ஆம் ஆண்டு நடிகர் அப்பாஸ் மற்றும் சங்கவி நடித்த இனி எல்லாம் சுகமே என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நிர்மலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தார். ஆனால், சினிமா துறையில் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வெற்றி பெறமுடியவில்லை. வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். முதன்முதலாக சன்டிவியில் தேவயானி நடித்த கோலங்கள் என்ற தொடரில் பிரபா கேரக்டரில் நடித்தார். அதன்பிறகுதான் தென்றல் சீரியல். அந்த சீரியலை மறக்க முடியுமா?90ஸ்களின் பேவரேட்.. துளசி என்றால் நினைவுக்கு வருவது ஸ்ருதி ராஜ்தான். தனது எதார்த்தமான நடிப்பால் அனைத்து வயதினரும் ரசிக்கும்படி நடித்திருப்பார். இந்த தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
ஆறு வருடங்கள் ஓடிய இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக 2012ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் வழங்கிய சிறந்த ஜோடிகள் விருதும் மற்றும் 2014ஆம் ஆண்டு வழங்கிய சிறந்த நடிகை, தேவதைகள் விருது மற்றும் சிறந்த ஜோடி போன்ற விருதுகளை வென்றார். இந்த தொடரின் தெலுங்கு பதிப்பில் இவரே கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆபிஸ் தொடர்தான். இதில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சன்டிவியின் அபூர்வ ராகங்கள் என பல தொடர்களில் நடித்தார்.
அதன்பிறகு சன்டிவியின் அழகு சீரியலில் சுதா என்கிற கேரக்டரில் வக்கீலாகவும் அன்பான மருமகளாகவும் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனது. ஆனால் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சிறிது நாட்கள் எந்த ஷூட்டிங்கும் இல்லாமல் சமூக வலைதளங்களில் பிஸியானார் ஸ்ருதி. இந்த நிலையில் மீண்டும் பிரம்மாண்டமாக சன்டிவியில் என்ட்ரி கொடுத்துள்ளார். சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரது கணவராக ‘தெய்வ மகள்’ புகழ் கிருஷ்ணா நடிக்கிறார்.
இந்த சீரியலுக்கு ஆரம்பத்திலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
40 வயதை கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார் ஸ்ருதி. சீரியல்களில் ஹோம்லியா நடித்தாலும் அவ்வபோது மார்டன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.