ஆந்திராவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களின் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது.
இதில் முதல்கட்டமாக உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம; செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கான டோக்கன்கள், திருப்பதி பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி 8,000 டோக்கன்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் டோக்கன் பெறுவதற்காக தினசரி 30,000 பக்தர்கள் குவிந்து வந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்ற சூழல் உருவானதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது இலவச தரிசனத்திற்கான டோக்கனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் இம்மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை தேவையான பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil