தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை திருநாளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த நாளில் அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியன், கால்நடை ஆகியவற்றிக்கு படைப்பது தமிழர்கன் பண்பாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல் நாளில் மக்கள் இந்திரனை (மழையின் கடவுள்) வணங்குகிறார்கள்.
அதேபோல் பொங்கல் தினத்தில் விதவிதமாக பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பாளார்கள். கடந்த காலங்களில் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வந்த நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் குக்கர், கேஸ்டவ் என டெக்னாலஜி வளர்ந்துவிட்டது என்பதால், அடுப்பு விறகு என பாரம்பரியத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.
அதே சமயம் கிராமங்களில் இன்றும் விறகு அடுப்பில் சமைக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக புதிதாக வீடு கட்டியவர்கள் தங்கள் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பொங்கல் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒன்றறை கப்
வெல்லம் – 3 கப்
தண்ணீர் தேவையான அளவு
முந்திரி, திராட்சை, ஏலக்காய் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
பாசி பருப்பு – கால் கப்
செய்முறை
முதலில் அடுப்பை எடுத்துக்கொண்டு, நனறாக கழுவி மஞ்சள் பொட்டு வைத்துவிட்டு, அதேபோல் பொங்கல் வைக்கும் பாத்திரத்தையும் நன்றாக கழுவி, பாத்திரத்தின் மேல் மஞ்சள் கயிறு கட்டி, மஞ்சள் பொட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு பச்சரிசையை எழுத்து நன்றாக கழுவி ஊறவைக்க வேண்டும். அரிசி கடைசியாக கழுவிய தண்ணீரை பொங்கல் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அரிசி கழுவிய தண்ணீரில் பொங்கல் வைக்கும்போது பொங்கல் நன்றாக பொங்கி வரும்.
அரிசி கழுவிய தண்ணீரை பொங்கல் பாத்திரத்தில் ஏற்றி அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். அடுப்பின் மையப்பகுதியில் கற்பூரம் வைத்து பற்ற வைப்பதே பாரம்பரிய முறையாகும். கற்பூரத்தை பற்ற வைத்து அதில், சிறிய விறகை முதலில் வைத்து தீ நன்றாக கொழுந்துவிட்டு எரிய செய்ய வேண்டும். அதன்பிறகு பெரிய விறகை கைத்து எரிக்கலாம்.
தண்ணீர் நன்றாக சூடாகி வரும்போது, அதில் அரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து வேகவைக்க வேண்டும். பொங்கல் நன்றாக குறைந்து தயாரானவுடன், ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிதளவு நெய் விட்டு, சூடாகியதும், ஏலக்காய், முந்திரி பருப்பு, திராட்சை, சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு பொங்கலை நன்றாக கிண்டிவிட்டு, வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
நன்றாக கிளறி விட்டவுடன், வறுத்து தனியாக வைத்துள்ள முந்திரி திராட்சை கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பிறகு சிறிது நேரம் அப்படியே விட்டு எடுத்தால் சுவையான பாரம்பரிய விறகு அடுப்பில் செய்த பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.