புதுக்கோட்டையில் பொக்கிஷம்... வீர பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

மைலாப்பட்டி மலை மீது உள்ள சிதலமடைந்த சிவன் கோயிலில் ஆய்வு செய்ததில் கோயிலின் அதிட்டானத்தில் உடைந்து கிடக்கும் இரு குமுதப்பட்டைகளில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

மைலாப்பட்டி மலை மீது உள்ள சிதலமடைந்த சிவன் கோயிலில் ஆய்வு செய்ததில் கோயிலின் அதிட்டானத்தில் உடைந்து கிடக்கும் இரு குமுதப்பட்டைகளில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kalvet

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மைலாப்பட்டியில் மலை மீது அழிந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் குழுவினர் மைலாப்பட்டி மலை மீது உள்ள சிதலமடைந்த சிவன் கோயிலில் ஆய்வு செய்ததில் கோயிலின் அதிட்டானத்தில் உடைந்து கிடக்கும் இரு குமுதப்பட்டைகளில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு குறித்து பேராசிரியர் முத்தழகன் கூறுகையில், சிதைவடைந்த கோவில் கட்டுமானத்தின் தென்புறம் உடைந்து கிடக்கும் இரு குமுதப் பட்டைகளில் 5 வரிகளில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரபாண்டியத் தேவரின் 8 ஆவது ஆட்சியாண்டில் உடையார் இராசராசிஸ்வரமுடைய நாயனார் ஆதிசண்டேஸ்வர தெய்வன்காமிகளுக்கு, அதாவது கோவில் நிர்வாகத்திற்குத் தேவதானமாக இவ்வூர் வயலில் பண்டன் தோட்டம் நத்த பறிகாலில் நான்கெல்லைக்கு உட்பட்ட ஒரு மாவரை நிலம் வழங்கப்பட்டுள்ளது. 

puduck

இந்நிலத்தில் விளையும் நெல்லில் பதினேழு கலனே ஐஞ்ஞாழி நெல்  கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட வேண்டும் எனும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். இக்கல்வெட்டின் குறிப்பிடப்படும் வீரபாண்டியன் பிற்கால பாண்டிய அரசனான இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியனாக இருக்க வாய்ப்புள்ளது. அவரது 8 வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி 1261 இல் இக்கல்வெட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

puduck2

இக்கல்வெட்டின் மூலம் இந்தச்சிவன் கோயில் இறைவன் பெயர் இராசராசிஸ்வரமுடைய நாயனார் எனத் தெரியவருகிறது. தற்போது சிலதமடைந்த நிலையில் உள்ள இந்தக் கோவில் உடைந்த லிங்கத்தின் அடிப்பாகம் மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் உள்ளன. இந்தக் கோயிலின் தென்கிழக்குச் சரிவில் சிதலமடைந்த சமணப் பள்ளி ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான உடைந்து கிடக்கும் இந்தக் கல்வெட்டுஉள்ள குமுதப் பட்டைகளை முறையாக இணைத்துக் கோயில் அதிட்டானத்தில் கட்டிப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: