/indian-express-tamil/media/media_files/2025/06/07/D4EVTGg9lyQHfJSweKki.jpeg)
தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா, பக்ரித் பண்டிகை மதுரை மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பக்தி உணர்வுடனும், சமூக நல்லிணக்கத்துடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து, தியாகத்தின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் இந்தப் புனித நாளில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகைகளை நிறைவேற்றினர்.
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம், ஆனையூர், கலைநகர், தபால்தந்திநகர், வள்ளுவர் காலனி, சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்களிலும் (திறந்தவெளி மைதானங்கள்) பள்ளிவாசல்களிலும் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புதிய ஆடைகளை அணிந்து, குடும்பத்தினருடன் தொழுகை நடைபெறும் இடங்களுக்கு திரண்டு வந்தனர். வயது வரம்பின்றி, பெண்கள், குழந்தைகள் என எராளமானோர் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டு இறைவனை வணங்கினர்.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு ஏற்பாடு
மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தொழுகையின் முடிவில், இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரித் பண்டிகையின் நடைமுறைகள், தியாகத்தின் மகத்துவம், மற்றும் ஈகை குணத்தின் அவசியத்தை எடுத்துரைத்தனர். இறைவனுக்காக தங்களின் நேசத்திற்குரியதை தியாகம் செய்ய முன்வந்த இப்ராஹிம் நபியின் வரலாற்றை விளக்கி, அதன் மூலம் மனித சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
சொற்பொழிவுக்குப் பின்னர், உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் என்றென்றும் நிலைக்க வேண்டி சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டது. பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, "ஈத் முபாரக்" கூறி தங்களது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர், இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில், வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.