தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் பலரும் பலவிதமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் டூர் விடியோ என்பது தற்போது ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்த ட்ரெண்டில் நாங்களும் இருக்கிறோம் என்பது போல் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கிச்சன் டூர் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணவர் என்னதான் நாடறிந்த தலைவராக இருந்தாலும் இல்லத்தரசிக்கே உரிதான பண்புடன் வலம் வரும் துர்கா ஸ்டாலின் அவ்வப்போது கோவிலுக்கு செல்லும் புகைப்படங்க்ள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அவரின் கிச்சன் டூர் வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.
பிரபலங்கள் வீட்டு கிச்சன் என்றாலே அங்கு பல வெளிநாட்டு பொருட்களுடன் கூடிய அலங்காரங்கள் அதிகமாகவே இருக்கும். அதே சமயம் ஃபாஸ்ட்புட் விரும்பும் இளம் தலைமுறையினர் ட்ரெண்டிங்கில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் பழைய சமையல் சாதனங்களான அம்மி உரல் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதில்லை.
ஆனால் இதற்கு நேர்மாறாக முதல்வர் வீட்டு கிச்சனில் தற்போதைய மாடர்ன் ட்ரெண்டில் இருந்தாலும் அம்மி, உரல், போன்ற பழங்கால சமையல் சாதனங்களுடன் சாதாரண பாத்திரங்களை வைத்துள்ளனர். தன் கையால் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து பரிமாறினால் தனது கணவர் திருப்தியாக சாப்பிடுவார் என்று துர்கா ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள கிச்சன் டூர் வீடியோவில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் குக்கர் போன்ற தற்போதைய சாதனைங்களை பயன்படுத்தாமல் மண் பாண்டங்களை பயன்படுத்தி சமையல் செய்கிறார். நாயகி என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அலுமனிய பாத்திரத்தில் சாதம் வடித்து மண் பானையில் குழம்பு வைக்கிறார் துர்கா ஸ்டாலின். இதை பயன்படுத்தவதுதான் தனக்கு எளிதாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மண் பானை மட்டுமல்லாமல் கூடவே அம்மிக்கல்லும் வைத்துள்ளார். அதேபோல் கொரோனா காலகட்டத்திற்கு வீட்டில் மூலிகை பொடி வைத்திருக்கிறார். காய்ச்சல் சளி வந்தால் கசாயம் வைத்து குடிப்போம் என்று சொல்கிறார். மருமகள் கையால் சமைத்த பிரியாணியை விரும்பி சாப்பிடும் முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா செய்யும் மீன் குழம்பை விரும்பி சாப்பிடுவாராம்.
மேலும் தான் கோபாலபுரத்திற்கு மருமகளாக வந்தபோது இங்கே கேஸ் அடுப்புதான் இருந்தது. ஆனாலும் அவ்வப்போது விறகு அடுப்பில் சமைப்போம். திருமணம் முடிந்துதான் சமைக்க கற்றுக்கொண்டேன். மாமாவுக்கு (கலைஞர் கருணாநிதி) மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.நாட்டுக்கோழி உள்ளிட்ட அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவார். சமைக்க ஆள் இருந்தாலும் காரம் குறைவாக போட்டு தனியாக சமைத்து கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“