கோவை விழா தொடக்கத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று கோவை விழாவின் லோகோ வெளியிடப்பட்டது. கோவையில் ஆண்டுதோறும் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் "ஜனவரி மாதம் 2"ம் தேதி முதல் 8"ம் தேதி வரை" 16"வது கோவை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கான லோகோ வெளியீட்டு விழா ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோ, மற்றும் மாரத்தானுக்கான டி-சர்ட்-ஆகியவற்றை வெளியிட்டனர்.
கோவை விழாவில் இந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டும் டபுள் டக்கர் பேருந்து மக்களுக்கு இலவசமாக இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்து கிறிஸ்மஸ் தொடங்கி 20 நாட்களுக்கு இயங்கும். இதில் பயணம் செய்ய கோயம்புத்தூர் விழா செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். உள்ளூர் ஓவியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஓவியச் சந்தை நடைபெறுகிறது.
கோவையில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகங்களை ஒருங்கிணைத்து உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. இது தவிர கார் மற்றும் பைக் பேரணி, பள்ளி மாணவர்களின் உரிமை பயணம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு உரிமை பயணத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெவ்வேறு வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று வந்து ஒன்றாக கூடி மத ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
இந்த ஆண்டு உரிமைப்பயணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முறை குளக்கரையில் லேசர் ஷோ நடைபெறவில்லை. மாறாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் பேண்ட் வாத்திய கச்சேரியும், இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளன என கோவை விழா தலைவர் ராகுல் கமத் கூறினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“