/indian-express-tamil/media/media_files/2025/02/15/BHvsITSDlbbFr0rjUa1V.jpg)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் சார்பில் எத்தனை வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன? விஜய்க்கு திடீரென பாதுகாப்பு அளிப்பது ஏன் என்பது குறித்து முன்னாள் டிஜி.பி ரவி ஐ.பி.எஸ் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்காக தனது கட்சியை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். சமீபத்தில் இந்தியாவின் பிரபலமான தேர்தல் வியூக ஆலோசகராக இருக்கும் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்திய விஜய், தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் பட்டியலையும் அறிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று (பிப்ரவரி 14) விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணியில், 10-க்கு மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் விஜய்க்கு திடீரென பாதுகாப்பு அளிக்க காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், இதற்கு முன்னாள் டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ். தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாதுகாப்பு பிரிவுகள்
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் மொத்தம் 6 பிரிவு பாதுகாப்பு இருக்கிறது. இதில் முதல் பிரிவு சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) இது இந்தியாவில் பிரதமர் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். இதில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். இந்த பாதுகாப்புக்காக பட்ஜெட் வருடத்திற்கு 528 கோடியாகும்.
அடுத்து இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு. இது இந்தியாவில் 51 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா, ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 51 நபர்களுக்கு வழங்ககப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு படையில் மொத்தம் 55 வீரர்கள் இருப்பார்கள். இதில் 10 பேர் என்.எஸ்.ஜி எனப்படும் பிளாக்கேட் கமாண்டோவாக இருப்பார்கள். புல்லட் ஃபுருப் வாகனம் 5 வழங்கப்படும். இந்த பாதுகாப்புக்கான செலவு மாதத்திற்கு 35 லட்சம்.
அடுத்து இசட் ஸ்கேல் பிரிவு பாதுகாப்பு. இதில் 5 பிளாக் கேட் கமாண்டோக்கள் இருப்பார்கள். மற்ற காவலர்கள் உள்ளூர் போலீஸில் இருந்து இருப்பார்கள். அடுத்து ஒய் பிளஸ் பாதுகாப்பு இதில் 2 முதல் 4 கமாண்டோக்கள் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 11 பேர் இருப்பார்கள். இந்த பாதுகாப்புக்கு மாதாந்திர செலவு 16 லட்சம் ஆகும்.
அடுத்ததாக ஒய் பிரிவு பாதுகாப்பு. தற்போது த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு இதுதான். இதில் 1 முதல் 2 பேர் வரை கமாண்டோக்கள் இருப்பார்கள். உள்ளூர் காவல்துறையில் உள்ள கமெண்டோக்களை இதில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகரிகள் 2 பேர் இருப்பார்கள். இவர்கள் இருவரும் 12 மணி நேரம் பணியாற்றலாம். இந்த பாதுகாப்புக்கு மாத செலவு 12 லட்ச ரூபாய்.
அடுத்து எக்ஸ் ஸ்கேல் பாதுகாப்பு. இதில் 2 சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் இருப்பார்கள். வாகனங்கள் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.
பாதுகாப்பு வழங்கப்படுவது எப்படி?
இந்தியாவில் பாதுகாப்பு கமிட்டி ஒன்று இருக்கிறது. இந்த கமிட்டியில் பாதுகாப்பு துறையின் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள். உளவுத்துறையின் அறிக்கையின்படி, அவர்கள் யாருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்களே அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை கூறியுள்ளது.
அடுத்து விஜய் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அது சட்டம் ஒழுங்கை பாதிக்கும். அடுத்து அவர், ஒரு அரசியல் கட்சி தலைவர். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ரவி ஐபிஎஸ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.