தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக "தமிழகத்தை கண்டு மகிழ்வோம் – 2024 (Discover Tamil Nadu-2024)" என்ற சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா பயணத்தையொட்டி, அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் சுற்றுலா பேருந்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளவும் தமிழ்நாட்டு சுற்றுலா தலங்களை பார்வையிட ஊக்குவிக்கவும், வெளிமாநிலங்களில் அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்களை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்து மூலம் சுற்றுலா அழைத்து செல்ல சுற்றுலாதுறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (25.10.2024) சென்னை தீவுத்திடல் டிரைவ் இன் ஓட்டல் வளாகத்தில் "தமிழகத்தை கண்டு மகிழ்வோம் – 2024 (Discover Tamil Nadu-2024)" என்ற சமூக ஊடகவியளாளர்கள் சுற்றுலா பயண தொடக்க நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர். சந்திரமோகன்.பி இ.ஆ.ப., சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொதுமேலாளர் கவிதா உள்பட சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சமூக ஊடக வலைதளங்களான யூ டியூப், பேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை பேஸ்புக் பக்கத்தை 1,82,000 நபர்களும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1,69,000 நபர்களும், எக்ஸ் பக்கத்தை 80,900 நபர்களும், யூ டியூப் –ஐ 13,900 நபர்களும் பின்தொடர்ந்து சுற்றுலாத்தலங்கள், விழாக்கள், திருவிழாக்கள் குறித்த தகவல்களை அறிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022ல் 21.89 கோடி ஆக இருந்து 2023ல் 28.71 கோடி ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2024ல் ஆகஸ்ட் மாதம் வரை 8 மாத காலத்தில் 20.69 கோடி என உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் தெரிந்து கொள்ள ஏதுவாக வெளிமாநிலங்களில் உள்ள அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாலத்தலங்களுக்கு பேருந்து மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மாமல்லபுரம், தஞ்சாவூர், தாராசுரம், காரைக்குடி செட்டிநாடு, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கீழடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களும், கோவில்களுக்கும் சென்று பார்வையிட்டு புகைப்படம் மற்றும் வீடியோகளை அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.
இந்த ஆண்டு, கர்நாடக மாநிலம் மங்களூர் சேர்ந்த மஹம்மத் ஹாரிஸ். ந சமூக ஊடகவியலாளர் (4.85 லட்சம் பின்தொடர்பவர்கள்), மும்பை சேர்ந்த அஜய் ஷர்மா மற்றும் தான்வி விஜய் பாட்டீல் தம்பதியனர் (3.07 லட்சம் பின்தொடர்பவர்கள்), கேரள மாநிலம் சேர்ந்த அபிதீப் பிரதீப் (2.69 லட்சம் பின்தொடர்பவர்கள்), ஸ்ரீநகரை சேர்ந்த பெண் சமூக ஊடகவியலாளர் நர்கிஸ் பர்ஹீ பஷீர் (2.83 லட்சம் பின்தொடர்பவர்கள்), கோவாவை சேர்ந்த சமூக ஊடகவியலாளர் டான்வீர் ஸஹபிர் தேசாய் (1.80 லட்சம் பின்தொடர்பவர்கள்), கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் சமூக ஊடகவியலாளர்கள் அண்டாரா பகாரியா & அமராபலி பகாரியா (1.75 லட்சம் பின்தொடர்பவர்கள்), கேரளாவைச் சேர்ந்த பெண் சமூக ஊடகவியலாளர் கோபிகா உன்னிகிரிஷ்ணன் (1.05 லட்சம் பின்தொடர்பவர்கள்), கேரளாவைச் சேர்ந்த ஷைக் ஹாசன் கான் சமூக ஊடகவியலாளர் (88 ஆயிரம் பின்தொடர்பவர்கள்), பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சமூக ஊடகவியலாளர்கள் அனாய்ஸ் நோசட் தம்பதியனர் (2.02 லட்சம் பின்தொடர்பவர்கள்) ஆகிய 9 சமூக ஊடகவியலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.