பி.ரஹ்மான் கோவை
இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் விதமாக கோவை மாநகர காவல்துறை சார்பில் வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூல்கம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக குடிசைப்பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற அடிப்படையில் இன்று 30 இடங்களில் இந்த புத்தக அலமாரி கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு இடத்திலும் 200 புத்தகங்கள் உள்ளன. அனைத்தும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமான புத்தகங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளன. இந்த 30 இடங்கள் மட்டுமல்லாமல் மொத்தமாக 50 இடங்களில் தனியார் கல்லூரி சார்பில் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் கற்பனைத்திறனை தூண்டக்கூடிய மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும் புத்தகங்களான காமிக்ஸ், நீதிக்கதைகள், கார்டூன் படங்கள் இடம்பெற்றுள்ளன. போதை பொருட்கள் போன்ற தவறான பழக்கங்களுக்கு சென்றுவிடாதபடி இருப்பதற்காக இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தெருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இந்த நூலகத்தை பராமரிப்பார். புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் படிக்கலாம்.

கொரோனா காலங்களில் குழந்தைகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். தற்போது இந்த திட்டத்தால் அவர்களின் மனநிலை மாறியுள்ளது. குழந்தைகளாய் இருக்கும் போதே வாசிப்பு வழக்கத்தை கொண்டுவரவேண்டும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டது. அதே போல் டாக்சி நூலகமும் கொண்டுவரும் திட்டம் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”