புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழாவான புஷ்கரம் வழிபாடு இந்ததாண்டு தாமிரபரணி நதிக்கரையில் கொண்டாடப்படுகிறது.
புஷ்கரம் வழிபாடு :
புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.
அதே போல் முன்னோர்கள் எழுதி வைத்து சென்ற புராணத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு புண்ணிய நதி உண்டு. மேஷம் – கங்கை, ரிஷபம் – நர்மதை, மிதுனம் – சரஸ்வதி,கடகம் – யமுனை, சிம்மம் – கோதாவரி, கன்னி – கிருஷ்ணா, துலாம் – காவிரி, விருச்சிகம் – தாமிரபரணி, தனுசு – சிந்து மகரம் – துங்கபத்ரா, கும்பம் – பிரம்மபுத்ரா, மீனம் – பரணீதா போன்ற நதிகளுக்கு உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.
குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். சென்ற வருடம் குருபகவான் துலாம் ராசியில் பிரவேசித்தபோது, துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகள் ராசிக்கு மாறியிருகிறார்.
அதனால், விருச்சிகம் ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு நதிகளிலும் புஷ்கரம் தினம் கொண்டாடப்படுவதால் இதை ‘மகா புஷ்கரம்’ என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சமபவம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது, பிரம்மதேவரை வேண்டி தவம் இருந்த குருபகவானுக்கு, ஒரு வரம் தர பிரம்மதேவர் அவர் நேரில் தோன்றினார். அப்போது, குருபகவான் , பிரம்மரிடம் ”அவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்’ என்றார்.
புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்கு சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.
இதுதான் புஷ்கர விழாவின் தாத்பர்யம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுவது வழக்கம்.