பெரும்பாலான வீடுகளில், மதியத்திற்கு எப்போதும் சாம்பார், காரக்குழம்பு தான். இதற்கு மாற்றாக நீங்கள் இந்த எளிய செய்முறையைக் கொண்ட வத்தக்குழம்பை முயற்சி செய்யலாம். நாம் எல்லாரும் உணவங்களில் வத்தக்குழம்பை விரும்பி சாப்பிடுவோம். சிலர் டேஸ்ட்டான வத்தக்குழம்பு கிடைக்கும் உணவங்களை தேடி சென்று சாப்பிடுவார். ஆனால் வீடுகளில் முயற்சி செய்ய மாட்டோம். ஏனெனில் வத்தக்குழம்பின் செயல்முறை கடினம் என்று நாம் தவறாக நினைத்துக் கொள்வது.
இதற்கு தீர்வாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த வத்தக்குழம்பைச் செய்யலாம். வத்தக்குழம்பிற்காக தனியாக மசாலா அரைக்க தேவையில்லை என்பது தான் இந்த ரெசிபியின் ஸ்பெசாலிட்டியே. எளிய செயல்முறையின் மூலம் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு & உளுந்து – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ½ டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
வத்தல் – 50 கிராம்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 ½ டீஸ்பூன்
வர மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கொத்த மல்லி - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை போட்டு பொரிய விட வேண்டும்.
பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். மேலும் இதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது வத்தல்களை இதில் சேர்த்து வதக்க வேண்டும். வத்தல்களை எண்ணெய்யில் நன்கு வதக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் சாப்பிடும் போது வத்தல் சுவையாக இருக்கும்.
வத்தல் நன்கு வதங்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் குழம்பு மிளகாய் தூள், மல்லித் தூள், வர மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எல்லாம் நன்றாக வதங்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்த பின்னர், கரைத்து வைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்க்க வேண்டும். மேலும் பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்த பின், இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்கள்.
அவ்வளவு தான் அருமையான வத்தக்குழம்பு ரெடி! நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிய ரெசிபியை செய்து பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil