வீட்டில் காய்கறி இல்லையா? அல்லது காய்கறிகளை நறுக்கி, வதக்கி, சமையல் செய்ய கஷ்டமா இருக்கா? உங்களுக்காகவே இருக்கிறது எளிமையான புதினா குழம்பு. வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு சுவையான புதினா குழம்பை சில நிமிடங்களில் செய்து விடலாம். இந்த புதினாக் குழம்பு சாதத்தில் சேர்த்துச் சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். வாருங்கள் காய்கறி தேவைப்படாத சுவையான புதினா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
புதினா குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் - 15
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
புதினா – 1 கைப்பிடி அளவு
தக்காளி – 1
வெந்தயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தூள் – 1 ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடேறியதும் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் உரித்து வைத்த பூண்டு பற்களைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இரண்டும் நன்றாக வதங்கிய பின்னர், அதில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.
எல்லாம் நன்றாக வதங்கிய பின்னர், இதனுடன் புதினா சேர்த்து வதக்க வேண்டும். புதினா வதங்கிய பின்னர், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கிய பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, இதனை நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும். இதில் வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
எல்லாம் நன்றாக வதங்கிய பின், அரைத்து வைத்த புதினாவை இதனுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இதில் மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் சேர்த்து நன்றாக சமைக்க வேண்டும்.
இதனுடன் கரைத்து வைத்த புளியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். குழம்பு கெட்டியாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான புதினா குழம்பு ரெடி! இதனை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இதனை செய்துப் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil