ஆர்.சந்திரன்
பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற ஓலம் ஒருபுறம். பொறியியல் பட்டம் பெற்றவர்களிடம் வேலைக்கான தகுதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு மறுபுறம் என்பது இன்றைய கல்வி சூழலாக உள்ளது. வெற்றிகரமாக பொறியியல் பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு நாங்கள் வேலை தருகிறோம் என முன் வந்துள்ளது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்.
டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் என குறிப்பிடப்படும் இந்த தனியார் ஐடி நிறுவனம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளைத் தேர்வு செய்து, அவற்றில் பி டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிஸினஸ் சிஸ்டம்ஸ்) என்ற 4 ஆண்டு பட்டப்படிப்பைத் தொடங்க ஆதரவு அளிக்கிறது. இந்த 4 கல்லூரிகளில் ஒன்றாக தமிழகத்தின் கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியைத் தேர்வு செய்துள்ளது. இது தவிர மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா ஒரு கல்லூரியைத் தேர்வு செய்ய உள்ள டிசிஎஸ், 4வது கல்லூரி எது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
இந்த பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்துக்கு தேவையான ஏஐசிடிஇ ஒப்புதலை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டத்தில் கற்பிக்க தேவையான பயிற்சியை டிசிஎஸ் நிறுவனமே சம்மந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் எனவும், தகுதியான ஆட்கள் இல்லாத பட்சத்தில் டிசிஎஸ் பணியாளர்களே நேரடியாக வந்து மாணவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இந்த நிறுவனத்திலேயே பணி வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலை, டிசிஎஸ் நிறுவனத்தின் உலக அளவிலான மனித வள மேம்பாட்டுத்துறை துணைத் தலைவர் ரஞ்ஜன் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.