காலையிலோ அல்லது மாலையிலோ, மிருதுவான பக்கோடாக்களுடன் சேர்த்து தேநீர் குடிப்பது பெரும்பாலான இந்திய குடும்பங்களின் பாரம்பரியமாக உள்ளது. இவ்வாறு எண்ணெய்யில் வறுத்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கானதாக கூறப்பட்டாலும், இவற்றை தேநீருடன் சேர்த்து சாப்பிடும் போது பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்.
எனவே, தேநீர் மற்றும் பக்கோடாக்களை தவிர்க்க வேண்டுமா?
மும்பையில் உள்ள சர் ஹெச்.என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவ உணவியல் நிபுணர் வேதிகா பிரேமணி, இது குறித்த தகவல்களை indianexpress.com-மிடம் பகிர்ந்து கொண்டார். "இந்த கலவையானது உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமற்றது. இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் போன்றவை தேநீரின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்பட்டாலும், அவை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. உதாரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்படுவது போன்றவை இதன் தன்மைகள். அந்த வகையில், ஆரோக்கியமான எண்ணெய்களில் செய்யப்பட்டாலும், பேக்கிங் அல்லது ஏர் ஃப்ரையிங் போன்ற பிற சமையல் நுட்பங்களைப் பயன்படுத்தியும் பக்கோடாக்களை செய்தால் அவை சிறந்ததாக இருக்கும்" எனக் கூறினார்.
இந்த கலவைகள் ஆரோக்கியமற்றதாக இருப்பதன் அறிவியல் காரணம் என்ன?
"டீயில் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. மேலும், மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்ட எண்ணெயில் பொரித்த பக்கோடாக்களை உட்கொள்வது டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் உற்பத்திக்கு வழிவகுக்கிறது" என்று பிரேமணி கூறினார்.
தேநீருடன் வேறு ஏதேனும் உணவுகளை தவிர்க்க வேண்டுமா?
தேநீரை பிஸ்கட் மற்றும் குக்கீஸ்களுடன் அடிக்கடி சேர்த்து சாப்பிடுகின்றனர். இவற்றில் கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
தேநீருடன் சமோசாவையும் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதிலும் கொழுப்பு அதிகமாக நிறைந்திடுக்கிறது.
ரொட்டி போன்ற பிற பேக்கரி பொருட்களையும் தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் அவற்றில் சோடியம், சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
உங்கள் தேநீர் நேரத்தை சுவையாக மாற்றக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகள் என்ன?
"ராகியில் செய்யப்பட்ட ஹம்முஸ், தோக்லா, மக்கானா, சென்னா சாட் மற்றும் ககாரா போன்றவற்றுடன் சேர்த்து தேநீரை பருகலாம். இது தவிர ஏர்-ஃப்ரையரில் சமைத்த காய்கறிகளும் பக்கோடாக்களுக்கு மாற்றாக அமையும்" என பிரேமணி குறிப்பிட்டுள்ளார்..
உங்களுக்குப் பயனளிக்கும் ஆரோக்கியமான சில தேநீர் வகைகளை அவர் பரிந்துரைக்கிறார்:
கெமோமில் தேநீர், ரோஸ்மேரி தேநீர் மற்றும் மஞ்சள், இஞ்சி தேநீர் ஆகியவற்றை அருந்தலாம். வழக்கமான தேநீரையும் மிளகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஆரோக்கியமானதாக மாற்றலாம். மிளகில் பைபரின் என்றழைக்கப்படும் உயிர்வேதியியல் மூலப்பொருள் உள்ளது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஏலக்காய் புத்துணர்ச்சியையும் சேர்த்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.