/indian-express-tamil/media/media_files/2025/05/10/8honegb5ieYK6OILCO75.jpg)
வீட்டில் எலுமிச்சை செடி வளர்ப்பது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், சில சமயங்களில் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைப்பதில்லை. கவலை வேண்டாம்! உங்கள் எலுமிச்சை செடியில் அதிக காய்கள் காய்க்கச் செய்ய சில எளிய, இயற்கையான முறைகளை ஆர்கானிக் கார்டனிங் டிப்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
உங்கள் எலுமிச்சை செடிக்குத் தேவையான சத்துக்களை அளிக்க இயற்கை உரங்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இரசாயன உரங்களைத் தவிர்த்து, வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே செடியை வளர்க்கலாம்.
அரிசி மற்றும் பருப்பு கழுவிய நீர்: வீட்டில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் கழுவிய தண்ணீரை வீணாக்காதீர்கள். அதை ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை புளிக்க வையுங்கள். பிறகு, அந்த நீருடன் மூன்று அல்லது நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து கலந்து, உங்கள் எலுமிச்சை செடிக்கு ஊற்றுங்கள். இதை ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒரு முறை செய்யலாம். இது செடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
தேயிலை தூள்: நாம் தினமும் பயன்படுத்தும் தேயிலை தூள் கூட ஒரு சிறந்த உரம். பயன்படுத்திய தேயிலை தூளை நன்றாகக் கழுவி, உலர வைத்து செடியின் வேர்ப்பகுதியில் போடலாம். இது மண்ணின் வளத்தை அதிகரிக்கும்.
மஞ்சளின் மகத்துவம்: கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை உங்கள் செடியின் மண்ணில் சேர்ப்பது வேர் பூச்சிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மண் பூச்சிகளைத் தடுக்க உதவும். மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுகிறது.
வேப்பம் புண்ணாக்கு: உங்களுக்கு வேப்பம் புண்ணாக்கு கிடைத்தால், அரை ஸ்பூன் அளவு செடிக்கு போடலாம். இது மண்ணை வளமாக்குவதுடன் பூச்சிகளையும் விரட்டும்.
வாழைப்பழத் தோல் தூள்: வாழைப்பழத் தோலை வெயிலில் காயவைத்து பொடியாக்கி பயன்படுத்துவது ஒரு அருமையான உரம். இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது செடியில் அதிக பூக்கள் பூக்கவும், காய்கள் காய்க்கவும் உதவும். மேலும், இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஒரு ஸ்பூன் உலர்ந்த தேயிலை தூளுடன் இரண்டு ஸ்பூன் வாழைப்பழத் தோல் தூள் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் எலுமிச்சை செடியின் தொட்டியின் விளிம்புகளில் போடவும். உரத்தை எப்போதும் செடியின் தண்டுக்கு அருகில் போடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உரம் போட்ட பிறகு செடிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். இந்த உரக் கலவையை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை பயன்படுத்தலாம். ஆனால், மஞ்சளை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் செடியின் அளவு மற்றும் தொட்டியின் அளவிற்கு ஏற்ப உரத்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.