தை அமாவாசையை முன்னிட்டு நம் வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது எப்படி என அனிதா குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தர்ப்பணம் கொடுப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று மன நிறைவுடன் வாழ வேண்டுமென்றால் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் வரக்கூடிய 2 அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒன்று தை அமாவாசை என்றும், மற்றொன்று ஆடி அமாவாசை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இந்த இரண்டு அமாவாசைகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். முக்கியமாக மன நிம்மதி வேண்டுமென்றால் நிச்சயமாக அமாவாசையன்று முன்னோர் வழிபாடு நடத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
அமாவாசை நாளன்று தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்னர், இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்கிய பின்னர் தான் நாம் சாப்பிட வேண்டும். அதன்படி, முன்னோர்களுக்கு படையல் போடும் போது, அவர்கள் உயிரோடு இருக்கும் போது எவற்றை எல்லாம் விரும்பி சாப்பிட்டார்களோ, அவை அனைத்தையும் படைக்க வேண்டும். குறிப்பாக, அகத்திக்கீரை, வாழைக்காய், வடை, பாயாசம் ஆகியவை இடம்பெற வேண்டும்.
மேலும், அவர்களின் பெயரைச் சொல்லி இலையை சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு இந்த படையல் சென்று சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தான் தர்ப்பணம் நிறைவு பெறும். ஜீவராசியான காக்காவுக்கு கட்டாயம் உணவு வைக்க வேண்டும்.
Advertisment
Advertisement
இவை அனைத்தும் நமக்கு புண்ணியத்தை கொடுத்து, நமது மனப்பிரச்சனைகளை தீர்த்து விடும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் வாழ்வில் நமக்கு இருக்கக் கூடிய தடைகள் நீங்கும் என்று அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். சூரியனும், சந்திரனும் இந்த நாளில் இணைவதால் அமாவாசை சிறப்பாக கருதப்படுகிறது. எனவே, அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்த பின்னர், குலதெய்வ வழிபாடு நடத்துவது இரட்டிப்பு பலன் தரும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
எனவே, அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும்.