Thai Kiruthigai 2024: முருகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளான தை கிருத்திகை நாளில், விரைவில் திருமணம், குழந்தைப் பேறு வேண்டி விரதம் இருக்க விரும்புபவர்களுக்கு, வழிபடும் முறை, நெய்வேத்தியம், மலர்கள், பாடல்கள், விரதம் இருக்கும் முறை பற்றி இங்கே தருகிறோம்.
முருகப் பெருமானுக்கு மிக உகந்த விரத நாட்களில் தை மாதத்தில் வருகிற தை கிருத்திகையும் ஒன்று. கிருத்திகை முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். புராணங்களின்படி, கார்த்திகைப் பெண்கள் முருகப் பெருமானை வளர்த்தவர்கள் என்பதால், அவர்கள் நட்சத்திரங்களாக இருந்து அருள் பெறுங்கள் என்று சிவன் வரம் கொடுத்தார். அதனால், முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிறைய பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை.
இந்த தை கிருத்திகை நாளில் எதற்காக எல்லாம் விரதம் இருக்கிறார்கள் என்றால், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த தை கிருத்திகை நாளில் வழிபடலாம், அதே போல, குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் இந்த தை கிருத்திகை நாளில் விரதமிருந்து வழிபடலாம். வேலையில் நல்ல பதவி வேண்டும் என்று விரும்புபவர்கள் விரதம் இருக்கலாம். அதே போல, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் நீங்க தை கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் நிலவ தை கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தை கிருத்திகை நாளில் எப்படி விரதமிருந்து வழிபட வேண்டும் என்றால், அதாவது பரணி நட்சத்திரம் என்று இருக்கிறதோ அன்று இரவில் இருந்தே சாப்பிடாமல் இருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். தை கிருத்திகை இந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. 19-ம் தேதி இரவே சாப்பாட்டை நிறுத்தி விரதத்தை தொடங்கலாம். உங்கள் உடல்நிலை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால், பால், பழம் போன்ற எளிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
தை கிருத்திகை நாளான ஜனவரி 20-ம் தேதி சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு, உங்கள் பூஜை அறையில் உள்ள எல்லா சாமி படங்களுக்கும் புதிய மலர்களை அணிவியுங்கள். உங்கள் பூஜை அறையில் முருகப் பெருமானின் படம் இருந்தால், பால் நெய்வேத்தியம் பண்ணலாம், பூஜை அறையில் முருகப் பெருமான் சிலை வைத்திருந்தால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதையடுத்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபட வேண்டும். பிறகு, உங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்லலாம்.
இதையடுத்து, மாலையில் 6 மணிக்கு மேல் முருகப் பெருமானுக்கு சற்குண கோலம் போட்டு, அதில் 6 தீபங்களை ஏற்றி வைத்து செவ்வரளி, வில்வம் போன்றவற்றைப் போட்டு முருகப் பெருமானை அர்ச்சனை செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் விபூதி இருந்தால் போதும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து விபூதி கொண்டு அர்ச்சனை பண்ணலாம். பின்னர், தீப தூபங்களைக் காட்டி இந்த வழிபாட்டை முடித்துக்கொள்ளலாம்.
அதே போல, தை கிருத்திகை நாளில், வடை, பாயசம், கூட்டு, பொரியல் செய்து படைத்து முருகப் பெருமானை வழிபடலாம். கிருத்திகை நட்சத்திரம் ஜனவரி 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அன்று நாள் முழுவது கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. அதனால், முருகப் பெருமான் வழிபாட்டை நீங்கள் மாலை 6 மணிக்கு கூட செய்யலாம்.
அதே நேரத்தில், உடல்நிலை காரணமாக, நீங்கள் விரதம் இல்லாமல் முருகப் பெருமானை வழிபடலாமா என்றால், தாராளமாக வழிபடலாம். முகப் பெருமானுக்கு காலையில் வெற்றிலைப் பாக்கு, ஒரு டம்ப்ளர் பால் வைத்து நெய்வேத்தியம் பண்ணாலே போதும். முருகப் பெருமன எல்லார்க்கும் அருளும் எளிய தெய்வம். பக்தர்கள் கேட்டதைக் கொடுக்ககூடிய அற்புத தெய்வம். அதனால், இந்த தை கிருத்திகை நாளில் முருகப் பெருமானை வழிபட்டு வேண்டியதைப் பெறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“