பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அறுவடைத் திருநாள்.
நல்ல அறுவடை தந்தற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். பொங்கலுக்கு முன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, புது வர்ணங்களை பூசி, மாவிலை தோரணங்கள் கட்டி, அலங்கரிக்கிறார்கள்.
அதேநேரம் வட இந்திய மக்கள் இதை, மகர சங்கராந்தி என்னும் பெயரில், திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதுவும் ஒரு அறுவடை திருவிழாதான். தமிழகத்தை போலவே அங்கும் மக்கள் விவசாயத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் சூரிய தெய்வத்தை போற்றுகிறார்கள்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான சூரிய பொங்கலன்று விவசாய மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து,வீடு முன் அடுப்புக்கட்டி, அதில் பொங்கல் பானை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மஞ்சள் தழைகளை அதன் விளிம்பில் கட்டி, புதிதாக அறுவடை செய்த பச்சரிசியில், வெல்லம், பால் ஆகியவற்றை கலந்து, பால் பொங்கி வரும்போது குளவையிட்டு பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க கூவி கொண்டாடுகின்றனர்.
பின்னர் அந்த பொங்கலை சூரிய பகவானுக்கும், முன்னோர்களான காக்கைகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் அன்று வைக்கப்படும் பொங்கல் குழம்பு மிகவும் பிரசித்தமானது.
ஓவ்வொரு வீட்டிலும், ஒரு பெரிய பானையில் எல்லா காய்கறி, பருப்பு, கிழங்குகளையும் போட்டு, குழம்பு வைப்பார்கள். அதை ஒரு வாரம் வரை, மறுபடி மறுபடி சூடாக்கி, சுண்ட வைத்து சாப்பிடுவார்கள். அந்த குழம்பின் ருசியே தனியாக இருக்கும்.
அதேபோல் இரண்டாம் நாளான மாட்டு பொங்கலன்று, விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளை அதிகாலையில் ஆறு, ஏரி, குளங்களுக்கு கூட்டிச்சென்று அவற்றை குளிப்பாட்டி, கொம்பு சீவி, அதில் வண்ணங்களை அடித்து, பூக்களை கட்டி, கால்நடைகளுக்கு பொங்கலிட்டு அவற்றை வணங்கி வழிபாடுவார்கள்.
மூன்றாவது நாளான காணும் பொங்கலன்று மக்கள் சொந்தங்களை சந்தித்து ஒன்றாக உணவருந்தி, அன்பு பரிமாறி மகிழ்கின்றனர். ஒரு சிலர், அன்று குடும்பங்களுடன் பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
இப்படி தமிழகத்தில் மூன்று நாட்களும் வெகுவிமர்சையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
தை 1-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு, சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போதுதான் மகா சங்கராந்தி புருஷர் பிறக்கிறார்.
அதன்படி இந்த ஆண்டு தை 1-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 8 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். அதேபோல், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பொங்கல் வைக்க சிறந்த நேரமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.