தைப் பூச திருநாள் உலகம் எங்கும் வாழும் முருக பெருமான் பக்தர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முருக பக்தர்கள் அனைவரும் சிறப்பு விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். குறிப்பாக, முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.
நடப்பு ஆண்டில், தமிழ் மாதப்படி தை மாதம் 29-ம் தேதியும், பிப்ரவரி 11-ம் தேதியும் தைப் பூசம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தை மாதம் 29-ம் தேதி காலையில் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. தைப்பூச திருநாளை முன்னிட்டு திரளான முருக பெருமான் பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரை செல்வார்கள்.
இந்த தைப் பூச திருநாளில் தான் வள்ளியை, முருகன் மணந்தார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் முருகனுக்கு உகந்த தைப் பூச திருநாளில் எவ்வாறு வழிபாடு நடத்துவது எனக் காணலாம்.
அன்றைய நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து நோன்பு கடைபிடித்து வழிபாடு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. எனினும், காலை மற்றும் மதிய வேளைகளில் பால் அல்லது பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், மாலை நேரத்தில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதுமட்டுமின்றி, பல முருக பெருமான் பக்தர்கள் தைப் பூசத்தை முன்னிட்டு 48 நாட்களுக்கு விரதம் மேற்கொள்கின்றனர். பார்வதி தேவியால் முருக பெருமானுக்கு, ஞானவேல் வழங்கப்பட்டது இதே நாளில் தான் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனால், தைப் பூசம் மேலும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
எனவே, இந்த தைப் பூச திருநாளில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கத் தொடங்கினால் மேலும் பல சிறப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, முருக பெருமானுக்கு வீட்டில் படைக்கப்படும் நைவேத்யத்தில் பஞ்சாமிர்தம் அல்லது இனிப்பு வகைகள், சித்ரான்னம், பருப்பு நெய் சேர்த்து சமைத்த உணவுகள், பொரி உருண்டை உள்ளிட்டவற்றை வைத்து வணங்கலாம்.