2024 ஆம் ஆண்டில் தைப் பூசம் எந்தத் தேதியில் வருகிறது? எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்? வேண்டுதல்கள் நிறைவேற முருகரை எவ்வாறு வழிபட வேண்டும்? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
கிராமிய பாடகர் அனிதா குப்புசாமி தனது வீகா யூடியூப் சேனலில் 2024 ஆம் ஆண்டு தைப் பூசம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள உகந்த நாள் தைப் பூசம். அலகுக் குத்திக் கொள்வது, பால் குடம், பன்னீர் குடம், முதுகில் குத்தி தேர் இழுப்பது, பாத யாத்திரை வருவது போன்றவற்றை பக்தர்கள் இந்த நன்னாளில் செய்து முருகனை வழிபடுவார்கள். இதற்காக பக்தர்கள் 48 நாட்களுக்கு முன்பே இதற்காக தயாராகி விடுவார்கள்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளணர்மியும் ஒன்றாக வரும் நாள் தான் தைப் பூசம். சூரபத்மன் என்ற அசுரனை அழிக்க சிவன் தனது சக்தியை முருகப்பெருமானுக்கு அளிக்கிறார். அதேபோல் பார்வதி ஞான வேலை அளிக்கிறார். இப்படி சக்திப் பொருந்திய முருகன் சூரபத்மனை அழித்ததைக் குறிக்கும் வகையில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த தைப்பூச நாளில் உங்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று பால், பன்னீர் அபிஷேகம், அன்னதானம், நீர் மோர் பந்தல் என ஏதாவது செய்யுங்கள். இதற்கான விரதம் யார் வேண்டுமேனாலும் மேற்கொள்ளலாம். முருகன் படம் அல்லது சிலையை சுத்தப்படுத்தி, பூச்சூடி, விபூதி குங்குமம் வைக்க வேண்டும். அடுத்து பால், பழம், பொறி சேர்ந்த நெய்வேத்தியம் அதாவது பிரசாதம் செய்ய வேண்டும். இனிப்பு செய்து முருகனுக்கு படைக்கலாம்.
விரதம் இருப்பவர்கள் காலையில் பால் மட்டும் குடித்துக் கொள்ளுங்கள். மதியம் நெய்வேத்திய பிரசாதம் மட்டும் சாப்பிடுங்கள். அன்றைய நாள் முழுவதும் ஓம் சரவண பவ, ஓம் முருகா என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருங்கள், கந்த ஷஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடலாம். மேலும், உங்கள் வேண்டுதல்களையும் மனதில் வேண்டிக் கொள்ளலாம். வழிபாட்டை தொடங்கும் முன் குலதெய்வத்தையும் விநாயகரையும் வழிப்பட்டுக் கொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் முருகனை வழிபடுவது நல்லது.
இந்த ஆண்டு தைப்பூசம் ஜனவரி 25 அதாவது தை 11 ஆம் நாள் வியாழக்கிழமை வருகிறது. பெளர்ணமி திதி ஜனவரி 24 தை 10 புதன்கிழமை இரவு 10.45 மணி முதல் ஜனவரி 25 தை 11 வியாழக்கிழமை இரவு 11.56 மணி வரை இருக்கும். பூசம் நட்சத்திரம் ஜனவரி 25 தை 11 வியாழக்கிழமை காலை 9.15 மணி முதல் ஜனவரி 26 தை 12 வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“