Pongal Seer Tamil News : திருமணமான முதல் தீபாவளியை ‘தலைத்தீபாவளி’ என மணப்பெண் வீட்டில் கொண்டாடுவதைப்போல் திருமணம் முடிந்த முதல் பொங்கலையும் சீரும் சிறப்புமாகப் புகுந்த வீட்டில் மணப்பெண் கொண்டாடுவது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பழங்கால வழக்கம்.
சூரியப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் இந்த தைப்பொங்கலில் மணமகள் வீட்டிலிருந்து வரும் சீர்வரிசைகளும் பிரசித்தம். ‘என்னம்மா பொங்கல் சீர் வந்ததா?’ என்று அக்கம்பக்கத்தினர் புதுப்பெண்ணிடம் கேட்பதும், பிறந்த வீட்டினரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மணப்பெண்ணின் தேடலும் பொங்கலுக்கான பெண்ணின் பரவச நிலை.
தாய் வீட்டுச் சீர், சகோதர வீட்டுச் சீர் என தங்கள் சக்திக்கு முடிந்த அளவில் கொடுப்பதை தங்கள் கவுரவமாக எண்ணுகின்றனர் மணப்பெண்ணின் குடும்பத்தினர். தங்கம், பட்டுப்புடவை, பட்டாசு, பலகாரம் பாக்குவெற்றிலை, பழம் என அனைத்தையும் வெள்ளித்தட்டில் வைத்துப் பிறந்த வீட்டில் மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் தீபாவளி சீர்வரிசையைவிட, பிறந்த வீட்டினர் தங்கள் மகளின் வீட்டிற்குப் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்று கொடுக்கிற சீர்வரிசைக்குத்தான் மவுசு அதிகம்.
சகோதரரின் சீர்
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிறந்த வீட்டுக்காரர்கள் குடும்பத்தோடு கடைவீதிக்குச் சென்று முதலில் வாங்கும் சீர்வரிசை பொருள் பொங்கல் பானைதான். அவரவர்கள் வசதிகளுக்கு ஏற்ப வெங்கலம், பித்தளை, மண் பானை என எதுவாகவும் இருக்கலாம். மூன்று நாள் பொங்கலுக்கு மூன்று என்கிற கணக்கில் மொத்தமாக மூன்று பானைகள் வாங்குவார்கள்.
பானையைத் தொடர்ந்து அச்சு வெல்லம், 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, செங்கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை, பட்டுவேட்டி, பட்டுப்புடவை, நல்லெண்ணெய், கருப்பட்டி, கைமுறுக்கு, வாழை இலை, காய்கறிகள், ஏலக்காய், முந்திரி, குத்து விளக்கு, சந்தனம், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, விளக்கு திரி, தீப்பெட்டி, சாம்பிராணி, கொம்புசாயம், கழுத்து மணி, தலைக்கயிறு, தங்க காசு அல்லது வெளிப்பணம் இவற்றையெல்லாம் வாங்கி ஓர் வண்டியில் ஏற்றிப் பிறந்த வீட்டு சீராகக் கொண்டுவந்து கொடுப்பார் சகோதரர்.
வாழ்த்து பணம்
உறவினர் புடைசூழச் சகோதரர் கொண்டுவந்த பொங்கல் சீர்வரிசையை மணப்பெண்ணின் புகுந்த வீட்டில் புது தம்பதியினரை நிற்க வைத்துக் கொடுப்பார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதங்களை வழங்கிய கையோடு தம்பதிகளுக்கு தங்களால் முடிந்த அளவிற்குப் பணம் வைத்துக் கொடுப்பார்கள். இதனை ‘வாழ்த்து பணம்’ என்று கிராமங்களில் சொல்வதுண்டு.
சம்பந்தி விருந்து
சீர்வரிசை வைத்தபிறகு, விருந்து உபசரிப்பு நடக்கும். சீர் வாய்த்த பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களின் வசதிக்கேற்ப கோழி அடித்தும் கிடாக்கறி சமைத்தும் விருந்து கொடுத்து மாப்பிள்ளை வீட்டினர் உபசரிப்பார்கள். இதனை ‘சம்பந்தி விருந்து’ என்றழைப்பார்கள்.
புது பொங்கலைத் தொடர்ந்து அடுத்து வரும் வருஷத்தில் பொங்கல் சமயத்தில் புதுப்பெண் கர்ப்பமாக இருந்தால், இந்த பிறந்த வீட்டு சீர் வரிசையோடு பசு மாடு ஒன்றையும் சேது கொடுப்பார்கள்.
தலைப் பொங்கலிலிருந்து தொடர்ச்சியாக வரும் மூன்று பொங்கலுக்குச் சீர் கொடுப்பது வழக்கம். தன் உடன் பிறந்த சகோதரி கண் கலங்காமல் வைத்து வாழும் மாப்பிள்ளைக்குக் காலம் முழுவதும் பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கமும் சில ஊர்களில் இருக்கிறது. சகோதரர்கள் இல்லாவிட்டால் அப்பாவின் மறைவிற்குப் பின் வீட்டின் மூத்த சகோதரி தந்தையாகவோ, சகோதரனாகவோ மாறி, இளைய சகோதரிகளுக்குச் சீர் அனுப்புவதும் உண்டு. தலைமுறை தலைமுறையாக அன்பையும் உறவுகளையும் தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த பொங்கச் சீர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”