தாமிரபரணி மகா புஷ்கரம் 2018 : கடந்த இரண்டு மாதங்களாக காதில் விழும் வார்த்தைகள் எல்லாம் மகா புஷ்கரம், திருநெல்வேலி, நெல்லை, தாமிரபரணி, படித்துறை என்பது மட்டுமே. இந்தியாவில் இருக்கும் 12 வற்றாத ஜீவநதிகளுக்கு ஒவ்வொரு ராசியையும் நேர்ந்துவிட்டு 12 வருடங்களுக்கு ஒரு முறை புஷ்கரமும், 144 வருடங்களுக்கு ஒரு முறை மகா புஷ்கரமும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. திருப்புடைமருதூர் மற்றும் குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
“ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி”
வரலாற்றின் படி பார்த்தால் இதற்கு சான்றுகள் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் குடும்பம் குடும்பமாக நெல்லைக்கு பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்பதை நாள் தோறும் செய்திகளில் கண்டு தெரிந்து கொள்கிறோம். மேலும் படிக்க : மஹா புஷ்கரம்
தாமிரபரணி மகா புஷ்கரம் 2018 : கலையும் கலாச்சாரமும் போற்றும் திருநெல்வேலி
நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரம் 2018 வழிபாட்டோடு நின்றுவிடாமல், அங்கு இருக்கும் இயற்கை வனப்பினை கொண்டாடுவதற்கும், பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதற்கும், கலையை ரசிப்பதற்கும் இந்த புஷ்கரத்தினை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தாமிரபரணி எனப்படும் பொருநை நதியானது பொதிகை மலையில் உற்பத்தியாகி, திருநெல்வேலியில் பாய்ந்தோடுகிறது. பொதிகை மலையில் இருந்து 125 கிமீ பாய்ந்தோடி மன்னார் வளைகுடாவில் சங்கமிக்கும் நதியின் இருபுறமும் வளர்ந்தோங்கிய நாகரீகம் இருந்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
கடல் கொண்ட குமரிக்கண்டத்தையும் வாழ வைத்த பொருநை நதிக்கரை தான் இன்றும் பாண்டிய, சோழ, நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட தொன்மை மிக்க வழிபாட்டுத் தலங்களை கொண்டிருக்கிறது. மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை போன்ற மாவட்டங்களில் இருக்கும் கலைசார் தொடர்புகள் வழியாக வெளிநாட்டினர் அம்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா வருகிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் கோவில்களின் பழமை மற்றும் அரிய அற்புதங்களை பார்வையிடுவது உள்ளூர் வாசிகளே.
தாமிரபரணி ஆற்றங்கரை கோவில்கள்
சிவ பெருமான் நடனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மன்றங்கள் அல்லது ஐம்பெரும் அம்பலங்களில் இரண்டு அம்பலங்கள் நெல்லையில் இருக்கின்றன. ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னிதானம் மற்றொன்று குற்றாலநாதர் - குழல்வாய் மொழி அம்மையின் சன்னிதானம். தாமிர அம்பலம் நெல்லையப்பர் ஆலயத்திலும் குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திர அம்பலமும் இருக்கிறது. சித்திர அம்பலத்தின் உள்ளே வரையப்பட்டிருக்கும் சுவரோவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவை அனைத்தும் 16ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை. இன்னும் அழியாமல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோவில்
பிட்சாடனர் சபை மண்டபத்தில் இருக்கும் சிவபெருமான் கங்காளநாதராக காட்சியளிக்கிறார். 7 அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட இச்சிலையின் சிறப்பு, பாதம் தவிர எந்த பிடிமானமும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பது தான்.
ஒரே கல்லில் மிகவும் பிரமிப்புடன் செதுக்கப்பட்டிருக்கும் நந்தி சிலை இந்த கோவிலில் இருக்கிறது. அதில் இருக்கும் மணி முதற்கொண்டு அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும். ஒற்றைக் கல்லினால் செதுக்கப்பட்ட பெரிய மணியும் அதன் சங்கிலித் தொடர்களும் தமிழர்களின் சிற்பக் கலைக்கு மிகப்பெரிய சான்றாக நிலைத்து நிற்கிறது. இருபது யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் இந்த கோவிலுக்கு மேலும் அழகூட்டுகிறது.
நெல் குத்தும் பிறை : இந்த கோவிலின் சிறப்புகளில் இருக்கும் மற்றொன்று இந்த பிறை என்று அழைக்கப்படும் அறை ஆகும். அறுவடை காலங்களில் கிடைக்கப்பெறும் நெல்லை இங்கு கொள்முதல் செய்து வைத்துக் கொள்வார்கள். மழைக்காலம் மற்றும் பஞ்சகாலம் வரும் போது இந்த நெல் மக்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. நெல்லை அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருக்கோவில்.
9 முக்கியமான சிவன் கோவில்கள் இருப்பது போல் 9 வைஷ்ணவ திருத்தலங்களும் நெல்லையில், தாமிரபரணி வளம் கொழிக்கும் ஊர்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தண்பொருநை என்றழைக்கப்படும் தாமிரபரணி நதியின் நீரானது அதன் பெயரைப் போலவே மிகவும் குளிர்ச்சியுடையதாகும். தண் - குளிர்ச்சி.
வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டிருக்கும் நெல்லை மாவட்டம்
ஆன்மிகத்திற்கு இடம் இருப்பது போலவே நெல்லையில் வரலாற்றுப் பின்புலமும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. மீசைக்காரன் பாரதி பிறந்த எட்டையபுரம், நெல்லை சீமையில் இருந்தது தான். இன்றும் பாரதியின் வீட்டினையும், பாரதியின் வரிகளையும் கனவுகளையும் சுமந்து நடந்த வீதிகளையும் இங்கு பார்க்கலாம்.
எட்டையபுர அரண்மனை
இன்றைய நிலவரப்படி பாரதியின் வீடும் எட்டையபுர அரண்மனையும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், தூத்துக்குடியே நெல்லை ஜில்லாவில் இருந்து உருவாக்கப்பட்டது தான். நாயக்கர்கள் காலத்தில் ஆட்சி செய்யப்பட்ட பாளையங்களில் மிக முக்கியமான ஒன்று எட்டையபுரமாகும். விடுதலை போராட்ட வீரர்கள் பலரை களம் கண்ட நெல்லையில் தான் அழகு முத்துக்கோன் என்ற முதல் விடுதலை வீரரும் உருவானார். அவர் எட்டையபுர அரண்மனையில் தளபதியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது எட்டையபுரம்.
கழுகுமலை சமணர் படுகைகள்
கழுகுமலையும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது. இந்த கழுகுமலை கோவில்ப்பட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. பாண்டிய மன்னனின் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குடைவரை அமைப்பு தமிழகத்தின் மத சார்பற்ற தன்மையை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதற்கு அருகில் தான் கழுகுமலை முருகன் கோவில் மற்றும் வெட்டுவான் கோவில்களும் அமைந்திருக்கின்றன.
களக்காடு புலிகள் சரணாலயம்
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும், இந்தியாவின் 17வது புலிகள் காப்பகம் ஆகும். திருக்குறுங்குடி தொடங்கி கடையம் வரையில் இருக்கும் 895 கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வன உரியினங்கள் காப்பகம் இதுவாகும். வனத்துறையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு இந்த வனப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபடலாம். பாபநாச அணை, பாணதீர்த்த அருவி, அகத்தியர் அருவி, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை ஆகியவற்றையும் இப்பகுதியில் ரசிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.