தஞ்சை அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திர நாடகங்களை நடத்தி பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி விரதத்தை எந்தவித இடையூறும் இன்றி முடிக்க உதவி வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு;
தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான இராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி நாடங்கள் நடத்தப்படுகிறது.

இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களில் கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.
வெள்ளித்திரை, சின்னத்திரை ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம்.
இதற்காக கார்த்திகை மாதம் முதல் தேதியிலேயே நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம். இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களை பார்த்து, ரசித்து வருகின்றனர். இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதை பாரம்பரியமாக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
நாங்கள் எல்லோரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து, அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம். பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள் சுமார் 100 பேராவது சென்று பாட்டு பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம் என்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“